`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ!'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன் | man pours acid in wife’s mouth over not voting his party

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:07 (26/04/2019)

`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ!'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்

தான் சொன்ன கட்சிக்கு வாக்களிக்க மறுத்த மனைவியின் வாயில் ஆசிட்டை ஊற்றியுள்ளார் கணவன். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிட்


மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்துவருகிறது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடந்தது. தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான விவாதங்கள் மக்களிடையே நடைபெற்று வரும் நிலையில், முர்ஷிதாபாத்தில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்சூரா பீபி. இவரின் கணவர், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர். அவர் தன் மனைவியையும், திரிணாமுல் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு அவரின் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவர், மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, ஆசிட் ஊற்றியதால் கடுமையான பாதிப்புக்குள்ளான அவர் மனைவி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், ``அன்சூராவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 48 மணி நேரத்துக்குப்பின்தான் எதுவாக இருந்தாலும் கூறமுடியும்'' என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அவரின் மகன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், `தாயின், தலைமுடியை இழுத்துச்சென்று அடித்து பின், வாயில் ஆசிட் ஊற்றி, தன் தந்தை துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.