`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல!' - வேட்பு மனுவில் மோடி தகவல் | PM modi files nominations from Varanasi

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (26/04/2019)

கடைசி தொடர்பு:17:11 (26/04/2019)

`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல!' - வேட்பு மனுவில் மோடி தகவல்

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  

மோடி வேட்புமனுத் தாக்கல்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி மீண்டும் களமிறங்குகிறார். இதற்காக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலையொட்டி நேற்றே வாரணாசி சென்ற அவர், தொண்டர்களுடன் பேரணி  நடத்தினார். இந்தப் பேரணியில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வம், ரவீர்ந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு நடைபெற்றக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்ஸுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி. வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மோடி

இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழக துணை முதல் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, 93 வயதான பிரகாஷ் சிங் பாதலின் பாதம் தொட்டு பிரதமர் மோடி ஆசி வாங்கினார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரகாஷ் சிங் பாதலிடம் ஆசிபெறும் மோடி

வேட்புமனுத் தாக்கலின்போது பிரதமர் மோடி, தனது சொத்து விவரங்கள் குறித்த பிரமாணப் பத்திரத்தை அவர் தாக்கல் செய்திருக்கிறார். அதன்படி, தன்னிடம் கையிருப்பாக ரூ.38,750 இருப்பதாகவும், சொந்தமாக காரோ அல்லது இருசக்கர வாகனமோ இல்லை என்று மோடி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.1.10 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், 45 கிராம் எடையில் 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.