ஒரே குடியிருப்புவாசிகள் இரு தொகுதிகளில் வாக்களிப்பு! - கேரள தேர்தலில் விநோதம் | same building voters cast their votes in different constituencies

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (26/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (26/04/2019)

ஒரே குடியிருப்புவாசிகள் இரு தொகுதிகளில் வாக்களிப்பு! - கேரள தேர்தலில் விநோதம்

கேரள மாநில நாடாளுமன்றத் தேர்தலில், ஒரே குடியிருப்பில் வசித்துவரும் மக்களில் பாதிப்பேர் ஒரு தொகுதியிலும் மீதிப்பேர் மற்றொரு தொகுதியிலும் வாக்களித்த விநோதம் அரங்கேறியுள்ளது. இந்த விநோத வாக்களிப்பு குறித்து இணையங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

வாக்களிப்பு - தேர்தல்

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதுவரையிலும் கேரளாவில் நடைபெறாத வகையில் 77.68 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

கேரளாவில் வாக்குப் பதிவின்போது கண்ணூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் இருந்த விவிபேட் இயந்திரத்தில் பாம்பு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புனலூர் அருகே உள்ள சினேகதீரம் என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் குடியிருப்பவர்கள் வாக்களிப்பு தினத்தில் இரு வேறு தொகுதிகளில் வாக்களித்த சம்பவம் நடந்துள்ள விவரம் வெளியாகியிருக்கிறது. 

building

Photo: manoranaonline.com

சினேகதீரம் என்ற இடத்தில் 56 சென்ட் நிலத்தில் ஒரு கம்ப்ளக்ஸில் சில குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஒரே கட்டடமாக உள்ள நிலையில், அதன் இடையே சாலை அல்லது ஆறு, கால்வாய் என எதுவுமே பிரிக்கவில்லை. ஆனாலும் அந்தக் கட்டடத்தின் 42 சென்ட் நிலம் புனலூர் நகராட்சியிலும் எஞ்சிய 14 சென்ட் நிலம் வில்லிகுடி பஞ்சாயத்திலும் சேர்க்கப்பட்டது. அதனால் ஒரே கட்டடத்தில் வசிப்பவர்களில் 67 பேர் மாவேலிக்கரை நாடாளுமன்றத் தொகுதியிலும், 32 பேர் கொல்லம் தொகுதியிலும் வாக்களிக்கும் நிலை உருவானது. 

இந்த விவகாரம் ஏற்கெனவே சர்ச்சையானதால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்தக் கட்டடத்தில் இருப்பவர்களை ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் பேசினார்கள். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஒரே கட்டடத்தில் வசித்தபோதிலும் இருவேறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தார்கள். வாக்குக் கேட்டு வந்த வேட்பாளர்கள் என்ன பாடு பட்டார்களோ பாவம்!