நெடுஞ்சாலை விரிவாக்கம் - 100 ஆண்டுகள் பழைமையான மசூதிக் கட்டடத்தை நகர்த்தும் அஸ்ஸாம் பொறியாளர்கள்! | Assam minaret moved

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (26/04/2019)

கடைசி தொடர்பு:20:21 (26/04/2019)

நெடுஞ்சாலை விரிவாக்கம் - 100 ஆண்டுகள் பழைமையான மசூதிக் கட்டடத்தை நகர்த்தும் அஸ்ஸாம் பொறியாளர்கள்!

அஸ்ஸாம் மாநிலத்தில் புரனிகுடம் என்ற இடத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த மசூதியின் அருகே என்ஹெச்-37 தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக மசூதியில் அமைந்துள்ள இரண்டடுக்கு மினாரை இடிக்க வேண்டியிருந்தது. 1909-ல் கட்டப்பட்ட நூறாண்டுகள் கடந்த வரலாற்றுப் பொக்கிஷமான மினாரை இடிப்பதை அந்தக் கிராமத்து மக்கள் விரும்பவில்லை. அந்த ஊரைச் சேர்ந்த இந்து, முஸ்லிம் என அனைத்து மதத்தவருக்கும் பிடித்த அடையாளச்சின்னமாக அந்த மசூதியைப் பார்க்கிறார்கள். எனவே, இதற்கு மாற்று யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, அந்த மினாரை இடிக்காமல் அப்படியே தோண்டியெடுத்து நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படாத தொலைவுக்கு நகர்த்தி வைக்கலாமென முடிவெடுக்கப்பட்டது.

மினார்

இந்தப் பணியைச் செய்துமுடிக்க ஹரியானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஹைட்ராலிக் முறையைப் பயன்படுத்தி நடைபெறும் இந்தப் பணியில் 100 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. இரண்டு கட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பணியில், முதலில் மினாரின் அடிப்பகுதி முழுவதும் தோண்டப்பட்டு நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. மசூதியை நகர்த்தி நிறுத்தும் பணி இன்னும் சில நாள்களில் செய்துமுடிக்கப்படும். 70 அடி தூரம் நகர்த்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், 50 அடி தூரம் தற்போது அது நகர்த்தப்பட்டிருக்கிறது.

மினார்

கடந்த 1950-ல் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தில்கூட எவ்வித பாதிப்புமின்றி இந்த மினார் தப்பியிருக்கிறது. தற்போது மீண்டும் ஒருமுறை நெடுஞ்சாலை விரிவாக்கச் சோதனையிலிருந்து தப்புவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.