`ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை உடனே நிறுத்துங்கள்!’ - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் | NCPCR says ‘No’ to Johnson & Johnson baby shampoo sale

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (27/04/2019)

கடைசி தொடர்பு:20:45 (27/04/2019)

`ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை உடனே நிறுத்துங்கள்!’ - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்துங்கள் என்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

ஜான்சன்

தாய்மார்களை பொறுத்தவரை குழுந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு, பவுடர், ஷாம்பு, போன்றவற்றிற்கு ஜான்சன் & ஜான்சன் ப்ராடக்ட்டுகளை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.  அவர்கள் மத்தியில் ஜான்சன் பொருள்களின் மீது நம்பிக்கை இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளில், ஜான்சன் தயாரிப்பு பொருள்களில் ஆபத்து விளைவிக்கும் பொருள்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகிக்கொண்டுள்ளது. இந்த ஜான்சன் தயாரிப்பு பொருள்களை பயன்படுத்துவார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி ராஜஸ்தான் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து வெளியான பரிசோதனை முடிவுகள்தான் இன்றைய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள கடித்ததின் அடிப்படை கூறு என்கிறார்கள்.

ஷாம்பு

ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, ஜான்சன் & ஜான்சன் NO more tears பேபி ஷாம்புகளை ஆய்வு செய்தது. அதில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தும் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருள் இருப்பதாக அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகின. அதுமட்டுமின்றி அதனை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நிர்வாகம் தரப்பில், `ஆய்வு தெளிவாக இல்லை. நாங்கள் ஃபார்மால்டிஹைட் வேதிப்பொருள்களை சேர்ப்பதில்லை’ என்று மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மார்ச் 5-ம் தேதி ராஜஸ்தான் மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருள்களின் பட்டியலை வெளியிட்டது.

பவுடர்

அதில் ஜான்சன் பேபி ஷாம்புவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. `இரண்டு பகுதிகளாக நடந்த சோதனையில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தோல்வி அடைந்தது’ என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் தான், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் பேபி டால்கம் பவுடர் குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தர சொல்லி ராஜஸ்தான் மருத்து கட்டுபாடு அமைப்புக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.