`புற்றுநோய்; வயிற்றுவலி; பொருளாதார நெருக்கடி’ - ஜெட் ஏர்வேஸ் ஊழியரின் சோகமான முடிவு! | Jet Airways Employee Commits Suicide in Maharashtra

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (28/04/2019)

கடைசி தொடர்பு:08:10 (29/04/2019)

`புற்றுநோய்; வயிற்றுவலி; பொருளாதார நெருக்கடி’ - ஜெட் ஏர்வேஸ் ஊழியரின் சோகமான முடிவு!

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இதனால் தங்களின் சேவையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்ததோடு மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளமும் வழங்கப்படவில்லை. வேலை இழப்பு, ஊதியம் வழங்காததைக் கண்டித்து அந்த நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் மூத்த டெக்னீசியன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ்

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் நலசோபாரா பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ் சிங். 45 வயதான இவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மூத்த டெக்னீஷியனாக வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், இவருக்கு வயிற்றில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக அதற்காக சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இருந்தும் அதன் வலி அதிகரித்து வந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீபத்தில்தான் உடல்நலம் சற்று தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சைலேஷ் சிங்

இருந்தும் அவருக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. வீட்டுக்கு வந்ததும் வலி இன்னும் அதிகரித்துள்ளது. மேலும், ஊதியம் வழங்கப்படாததால் பொருளாதார ரீதியிலும் சைலேஷ் பாதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோய், வயிற்று வலி, பொருளாதார நெருக்கடி போன்ற அனைத்து ஒன்று சேர்ந்து அவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் மனம் உடைந்துபோன அவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பேசிய காவல்துறையினர், ‘ சைலேஷ் சிங் அதிக மன உலைச்சலின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விசாரித்தபோது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாமல் இருந்ததில் இருந்து இவர் மட்டுமே தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர்’ எனக் கூறியுள்ளார்.