`ஒரிஜினல் மார்க் 99; ஆசிரியர் போட்டது பூஜ்யம்!'- 21 தற்கொலைகளால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் | Telangana Teacher Gives Student '0' Suspended

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (29/04/2019)

கடைசி தொடர்பு:13:12 (29/04/2019)

`ஒரிஜினல் மார்க் 99; ஆசிரியர் போட்டது பூஜ்யம்!'- 21 தற்கொலைகளால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

தெலங்கானாவில் வெளியான பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தற்போது வரை அங்கு 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

தெலங்கானாவில் அரசு பொதுத் தேர்வு விண்ணப்ப பதிவு மற்றும் முடிவு வெளியிடும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவ -மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர் ஆனால், அவர்களில் மூன்று லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். 

தேர்வு

இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வந்த நாளில் இருந்து இதுவரை சுமார் 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் தொடர் தற்கொலையை அடுத்து மாநிலம் முழுவதும் பெற்றோர்களும் பிற மாணவர்களும் போராட்டம் நடத்தினர். பின்னர் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இலவசமாக மறு மதிப்பீடு செய்துகொள்ளலாம் என்றும் அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டது. அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. 

தற்கொலை

அரசு நியமித்த மூன்று பேர் கொண்ட குழு நேற்று அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில், மாணவர்களின் தேர்வுத் தாள் மதிப்பீட்டின்போது அதிக கவனக்குறைவு,  தொழில்நுட்பக் கோளாறு மற்றும் ஆசிரியர்களின் பிழைகள் போன்றவையே முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நியமித்துள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், தவறு செய்த ஆசிரியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா கல்வித் துறை செயலர் ஜனார்தன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மன உழைச்சல்

தேர்வு எழுதிய சில மாணவர்கள் அன்றைய தினம் விடுப்பு எனத் தவறாக பதிவிடப்பட்டுள்ளது. இதில் திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணைப் பற்றித்தான் மாநிலம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்தப் பெண் 11-ம் வகுப்பு படிக்கும்போது தெலுங்குப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், தற்போது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் அவருக்கு  `0’ மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. திவ்யாவின் தெலுங்கு தாள் மறு மதிப்பீட்டில் அவர் 99 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரின் தாளை மதிப்பீடு செய்த தனியார் ஆசிரியைக்கு ரூ.5000 அபராதம் மற்றும் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் ஆசிரியையை பணி நீக்கமே செய்துவிட்டது. இதேபோன்று பழங்குடி மாணவர்கள் பயிலும் பள்ளியைச் சேர்ந்த ஓர் ஆசிரியரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.