பயத்தால் வான்பரப்பை மூடியே வைத்திருக்கும் பாகிஸ்தான்! - ஏர் இந்தியாவுக்கு 300 கோடி நஷ்டம் | Air India losses Rs 300 crore because of Pakistan air space closes

வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (29/04/2019)

கடைசி தொடர்பு:14:27 (29/04/2019)

பயத்தால் வான்பரப்பை மூடியே வைத்திருக்கும் பாகிஸ்தான்! - ஏர் இந்தியாவுக்கு 300 கோடி நஷ்டம்

டந்த பிப்ரவரி 27-ம் தேதி புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பால்கோட்டில் வெடிகுண்டுகள் வீசின. அப்போது மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பரப்பு  60 நாள்களாக  முழுவதுமாக திறக்கப்படவில்லை 

பாகிஸ்தான் வான்பரப்பு மூடல் நஷ்டத்தில் ஏர்இந்தியா

இதனால், ஏர் இந்திய விமானங்கள் மாற்று வழியைப் பயன்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருகின்றன. வளைகுடா நாடுகளுக்கும் மாற்று வழியைப் பயன்படுத்தியே ஏர் இந்தியா விமானங்கள் செல்கின்றன. இதனால், அதிக எரிபொருள் செலவாவதுடன் பயண நேரமும் அதிகமாகியுள்ளது. அமெரிக்கா செல்ல வழக்கத்தைவிட 2 அல்லது 3 மணி நேரம் கூடுதலாகி உள்ளது.  நாள் ஒன்றுக்கு ஏர் இந்தியா 6 கோடியை நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை, ஏர் இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டமாகியுள்ளது. 

பாகிஸ்தான் தன் வான் பரப்பை மூடி வைத்திருப்பதால் ஏர் இந்தியா மட்டுமல்ல பல சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் 311 விமானங்கள் இதனால், பாதிக்கப்பட்டுள்ளன. பல மார்க்கங்களில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி- வாஷிங்டன், டெல்லி-சிகாகோ மார்க்கங்களில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்லும் நெடிய பயண நேரம் கொண்ட விமானங்கள் ஷார்ஜாவில் இறங்கி எரிபொருள் நிரப்பும். பைலட்டுகளும் சிப்பந்திகளும் மாறிக்கொள்வார்கள். இப்போது, வியன்னாவில் பைலட்டுகள்  மாறுகிறார்கள். 

ஏர்இந்தியா

அமெரிக்காவின் யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் டெல்லி - நுவர்க் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்திய விமானங்களை தன் வான் பரப்பிலேயே பாகிஸ்தான் அனுமதிப்பது இல்லை. இந்தியாவில் இருந்து புறப்படும் வெளிநாட்டு விமானங்களையும் பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி மறுக்கிறது. பால்கோட் தாக்குதல்போல இரண்டாவது தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் கூறி வருவதே இதற்குக் காரணம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க