`உங்கள் கட்சியின் 40 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம்!' - மம்தாவைச் சீண்டும் மோடி | Didi, 40 of your MLAs are in contact with me - modi

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (29/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (29/04/2019)

`உங்கள் கட்சியின் 40 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம்!' - மம்தாவைச் சீண்டும் மோடி

மோடி

பா.ஜ.க-வுக்கும் மம்தாவுக்கும் இடையேயான அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தில் இருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்குக்கூட  பா.ஜ.க தலைவர்கள் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் அம்மாநிலத்தில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க தீவிராக முயன்றுவருகிறது. இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ” மம்தா அவர்களே, மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். நாடெங்கும் தாமரை மலரும். உங்கள் எம்.எல்.ஏ-க்கள் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள். உங்களுடைய 40 எம்.எல்.ஏ-க்கள் தற்போது வரை என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனப் பேசியுள்ளார்.

இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரைன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.   ‘ காலாவதியாகப்போகும் பிரதமரே... உங்களுடன் யாரும் வரப்போவதில்லை. ஒரு கவுன்சிலர்கூட வரமாட்டார். நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்களா அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா?  நீங்கள் காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது. குதிரைப் பேரத்தில் ஈடுபடும் உங்கள்மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்” என ட்வீட் செய்துள்ளார்.