பத்திரிகையாளர் சந்திப்பும்... மோடியின் அச்சமும்! | Why Modi is scared of press meet?

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (29/04/2019)

கடைசி தொடர்பு:10:28 (30/04/2019)

பத்திரிகையாளர் சந்திப்பும்... மோடியின் அச்சமும்!

பத்திரிகையாளர் சந்திப்பை மோடி நடத்தாததை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சிக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பும்... மோடியின் அச்சமும்!

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, `பத்திரிகையாளர்களைச் சந்திக்க பிரதமர் மோடி பயப்படுகிறார்’ என்கிற சர்ச்சை திடீரெனக் கிளம்பியது.

இந்த சர்ச்சை புதிது அல்ல என்றபோதிலும், அது கிளம்பிய விதம் வித்தியாசமானது. `பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்க மோடி பயப்படுகிறார்’ என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன. இந்நிலையில், `பிரதமர் மோடி வாரணாசியில் ஏப்ரல் 26-ம் தேதி, அதாவது வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளில், பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்’ என்கிற செய்தி ஊடகங்கள் வாயிலாகக் கிளம்பியது. அது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், அப்படியான பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான திட்டம் எதுவும் இல்லை என்று பி.ஜே.பி தரப்பில் அவசர அவசரமாக மறுப்பு வெளியானது. அதையடுத்து, `உங்களால் அது முடியாது’ என்று #FekuModi என்ற ஹேஷ்டேக் உடன் ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சி.

அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் மோடி, எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ, அந்த நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதியுடன் சேர்ந்து கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை அவர் நடத்தியதில்லை. எனவே, தேர்தல் நேரத்தில் இதை ஒரு விவாதப்பொருளாக ஆக்குவதற்காக காங்கிரஸ் கட்சியே இப்படியொரு செய்தியைக் கிளப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டது. 

நரேந்திர மோடி

பத்திரிகையாளர் சந்திப்பை மோடி நடத்தாததை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சிக்கிறார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி, செய்தியாளர்களைப் பார்த்து, ``நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால், அவரைப் (மோடி) பார்த்துப் பயப்படுகிறீர்கள். மோடியிடம் போய், `இந்திய மக்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள், ஊடகத்தைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?’ என்று கேளுங்கள். 'பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த ஏன் பயப்படுகிறீர்கள்?' என்று கேளுங்கள்” என்றார்.    

அதற்கு முன்பு மார்ச் 1-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ``நான் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறேன். இதுபோல பத்திரிகையாளர் சந்திப்பை `சௌகிதார்’ நடத்துகிறாரா. எப்போதுமே மோடி பொய் சொல்லிவருகிறார். உண்மைகளைக் கேட்க வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள்... பொய்களைக் கேட்க வேண்டுமென்றால் மோடியின் பொதுக்கூட்டங்களுக்குச் செல்லுங்கள்” என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும்கூட, தன் பங்குக்கு இந்த விஷயத்தில் மோடியைச் சாடினார். `மாறும் இந்தியா’ என்கிற தமது புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, `` `பேசாத பிரதமர்’ என்று என்னைச் சொல்கிறார்கள். ஆனால், நான் பேசாமல் இருந்ததில்லை. இதை என்னுடைய இந்தப் புத்தகமே சொல்லும்...” என்று கூறிய மன்மோகன் சிங், ``பத்திரிகையாளர்களைச் சந்திக்க நான் பயந்ததே இல்லை” என்று மோடியை மறைமுகமாகச் சாடினார். ``தொடர்ச்சியாக நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவந்தேன். வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்திலேயே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்போது பத்திரிகையாளர்களை நான் சந்திப்பது உண்டு” என்றார்.

மோடி

மன்மோகன் சிங் மட்டுமல்ல, பி.ஜே.பி-யைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த அவர் தயங்கியதே இல்லை. வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்திலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியிருக்கிறார். ஆனால், மோடி மட்டும் ஏனோ பத்திரிகையாளர்களைத் தவிர்த்துவருகிறார்.

இது குறித்து விளக்கமளிக்கும் பி.ஜே.பி-யினரோ, "பத்திரிகையாளர்களைக் கண்டு மோடி பயப்படவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். மோடியைப் பொறுத்தவரை தமக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார். `மன் கி பாத்’ மூலமாக மக்களிடம் அவர் பேசுகிறார். பொதுக்கூட்டங்களில் நேரடியாக மக்களிடம் உரையாடுகிறார்” என்கிறார்கள்.      

ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ``எனக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் நகைச்சுவை என்பது ரிஸ்க் நிறைந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. 24x7 செய்தி சேனல்கள் நிறைந்த காலகட்டத்தில், நம்முடைய பேச்சிலிருந்து ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு அதை ஒரு பெரிய பிரச்னையாக மாற்றிவிட முடியும். நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன்... பொது வாழ்க்கையில் நகைச்சுவையாக இருக்காததற்குப் பயம்தான் காரணம். எனக்கும் அந்தப் பயம் உண்டு. முன்பெல்லாம் என் உரையில் நிறைய நகைச்சுவை இருக்கும். ஆனால், இப்போது நான் பயப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பை மோடி தவிர்ப்பதற்கும் இதுதான் காரணமா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்