தேர்தல் முடிவு:  ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதவி தப்புமா?  | Shaktikanta Das seen as safe no matter who wins 2019 general elections 

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (02/05/2019)

கடைசி தொடர்பு:18:50 (02/05/2019)

தேர்தல் முடிவு:  ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதவி தப்புமா? 

ருகிற மே 23-ம் தேதியன்று, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, ரிசர்வ வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும், அவர் இரு தரப்பிலும் தனக்கான ஆதரவை ஏற்படுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல், கடந்த 2018, டிசம்பர் மாதம் திடீரெனப் பதவி விலகினார். உடல் நலன் காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் கூறியிருந்தாலும், மத்திய அரசுடனான மோதலைத் தொடர்ந்தே, அவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது. 

இந்த நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலராகப் பணியாற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமலாக்கம் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றியவரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் விசுவாசமானவருமான சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து, மோடியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் ,மத்திய அரசுடன் இணக்கமாக நடந்துவருகிறார். குறிப்பாக மத்திய அரசு, தனது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியின் பெரும் பகுதியைத் தனக்கு மாற்றுமாறு கோரி வந்தது. இதற்கு, அந்த வங்கியின் முந்தைய கவர்னரான உர்ஜித் படேல் உடன்படவில்லை.  ஆனால்,  சக்திகாந்த தாஸ் பதவிக்கு வந்த பின்னர், கடந்த பிப்ரவரி மாதம்  28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.  மேலும், வாராக் கடன் பிரச்னையில் பொதுத்துறை வங்கிகளிடம் காட்டிய கெடுபிடிகளையும் ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டது. 

பிரதமர் மோடி

இப்படி, மோடிக்கு மிக விசுவாசமாக இருக்கும்  சக்திகாந்த தாஸின் பதவிக்காலம்  2021, டிசம்பர் வரை உள்ளது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தால் இவரின் பதவி தப்புமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது. இருப்பினும், தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சக்திகாந்த தாஸின் பதவிக்கு ஆபத்தில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள்  அரசு அதிகாரியான சக்திகாந்த தாஸ், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் கீழும் பணியாற்றியுள்ளார், காங்கிரஸ் தலைமையிலான அரசின் கீழும் பணியாற்றியுள்ளார்.  மத்தியில், இதற்கு முன்னர் மன்மோகன் சிங்  தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி வகித்தபோது, நிதியமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார்.

அப்போதைய நிதியமைச்சரான ப. சிதம்பரத்துடன் பட்ஜெட் தயாரிப்பில் உதவியாகச் செயல்பட்டு, அவரிடம் இணக்கமாக இருந்துள்ளார். எனவே, மத்தியில் ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்றாலும், சக்திகாந்த தாஸ் பதவிக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. 

ப. சிதம்பரம்

இதனால், வங்கிகள் தொடர்பான நடவடிக்கைகளில் குழப்பம் எதுவும் ஏற்படாது என்றும், இது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளிப்பதாக உள்ளது என்றும் முதலீட்டு ஆலோசனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க