`2014 முதல் 942 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன; காதுகளைத் திறந்து கேளுங்கள் பிரதமரே!' - ராகுல் காந்தி | "942 Bombings Since 2014, PM Needs To Open His Ears": Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (02/05/2019)

கடைசி தொடர்பு:19:18 (02/05/2019)

`2014 முதல் 942 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன; காதுகளைத் திறந்து கேளுங்கள் பிரதமரே!' - ராகுல் காந்தி

`பிரதமர் மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை 942 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது’ என காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

காங்கிரஸ் ராகுல்காந்தி

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில், கமாண்டோ படை வீரர்களின் வாகனத்தின்மீது மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர்கள் பயணம்செய்த வாகனம் வெடித்துச் சிதறியது. வாகனத்தில் பயணம்செய்த 15 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டதாக அம்மாநில அமைச்சர் சுதிர் முகந்திவர் (Sudhir Mungantiwar) தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு வீரர்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் எதுவும் இந்தியாவில் கேட்கவேயில்லை என்கிறார்.

தாக்குதல்

புல்வாமா, பதான்கோட், உரி, கட்சிரோலி, என 2014-ம் ஆண்டு முதல் இன்று வரை மொத்தம் 942 முக்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மோடி, அவர் காதுகளைத் திறந்து அந்த சந்தங்களை கேட்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல காங்கிரஸ் முன்னாள்  மத்தியஅமைச்சர்  ப.சிதம்பரம், கடந்த வாரம் மோடியைச் சாடியிருந்தார். தன் பதவிக்காலத்தில் குண்டுவெடிப்புகள் எதுவும் நிகழவில்லை என  பிரதமர் கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். மோஹ்ரா, தண்டிவாடா, பாலமு, அவுரங்காபாத், கோரக்பூர், சுக்மா, அவபள்ளி, சத்தீஸ்கர் ஆகியவற்றை பட்டியிலிட்டு, ``ஞாபக மறதியா அல்லது கட்டாயத்தின் காரணமாக மறந்துவிட்டாரா... யாராவது பிரதமருக்கு இதைப் படித்துக்காட்டுங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மோடி

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், 'பா.ஜ.க தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதில் தவறிவிட்டது' என்று குற்றம்சாட்டியிருந்தார்.``நம் ராணுவ வீரர்கள் எல்லையில் மடிந்துகொண்டிருக்கிறார்கள். நக்ஸல் தாக்குதலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க ராணுவ வீரர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துகொண்டிருக்கும்போது, என்ன மாதிரியான தேசியப் பாதுகாதுகாப்பு இது?” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.