43 ஆண்டுகளில் இல்லாத பெரும் கோடைப் புயல்! - கரையைக் கடக்கிறது ஃபானி#CycloneFani | Cyclone Fani Set To Hit Odisha

வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (03/05/2019)

கடைசி தொடர்பு:12:26 (03/05/2019)

43 ஆண்டுகளில் இல்லாத பெரும் கோடைப் புயல்! - கரையைக் கடக்கிறது ஃபானி#CycloneFani

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரியில் இன்று கரையைக் கடக்கிறது. இதனால் மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்றுவீசக் கூடும் என்றும் மாநிலம் முழுவதும் சுமார் எட்டு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புயலின் காரணமாக ஒடிசா கிழக்குக் கடற்கரையில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஃபானி புயல்

இன்று ஃபானி புயல் கரையைக் கடக்கவிருக்கும் பூரி பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் ஐந்து அடி வரை தண்ணீர் உயரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் சுமார் 5000 உணவு தயாரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஃபானி புயல்

ஃபானி புயலால் ஒடிசாவில் உள்ள 10,000 கிராமங்கள், 52 நகரங்கள் மற்றும் 9 மாவட்டங்கள் ஆகியவை பாதிக்கக்கூடும் என்பதால், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் என அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவின் சில பகுதிகளிலும் இந்தப் புயலின் தாக்கம் உள்ளது. ஸ்ரீககுளம், விழாநகரம், விசாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்குச் செல்லும் 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைத் தாக்கும் மிகப் பெரும் கோடைப் புயல் இது என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

ஃபானி புயல்

பூரி மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு இருக்கும் என்பதால் ஒடிசா அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 7 போர்க்கப்பல்கள், 6 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை பாதுகாப்பு பணிகளுக்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.