`என் சாவுக்கு இந்திய அரசுதான் காரணம்!’- 28 மாதம் சம்பளம் கொடுக்காததால் இன்ஜினீயர் தற்கொலை |  'Govt of India Responsible' - Assam Paper Mill Worker Suicide

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (03/05/2019)

கடைசி தொடர்பு:12:50 (03/05/2019)

`என் சாவுக்கு இந்திய அரசுதான் காரணம்!’- 28 மாதம் சம்பளம் கொடுக்காததால் இன்ஜினீயர் தற்கொலை

 இன்ஜினியர் தற்கொலை

`என் சாவுக்கு இந்திய அரசாங்கம்தான் காரணம்’ என எழுதிவைத்துவிட்டு, அஸ்ஸாமில் இயங்கிவந்த ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இன்ஜினீயர் பிஸ்வாஜித் மஜும்தார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஊழியரின் மரணம் என்ற ஒற்றை வரிகளில் இதைக் கடந்து செல்ல முடியாது. 28 மாதங்களாகச் சம்பளம் இல்லை. ஊழியர்களுக்காக பென்ஷன் பணம், வர வேண்டிய பிற தொகைகள் என எல்லாம் நிறுத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமான குடும்பங்கள் தவித்து வருகிறது. மருத்துவச்செலவுகளுக்குக்கூட பணமில்லாமல் தங்கள் விருப்பமானவர்களின் மரணங்களை கண்முன்னே கண்டுவருகின்றனர். மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. 

பேப்பர் ஆலை

அசாமில் உள்ள நாகோன் ஆலை கடந்த 2015-ம் ஆண்டு மூடப்பட்டது. ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் கீழ் இந்த ஆலை இயங்கி வந்தது. ஆலை மூடப்படும் செய்தி ஊழியர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது மூடப்பட்ட ஆலை திறக்கப்படும் எனப் பா.ஜ.க  தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. பா.ஜ.க ஆட்சியையும் கைப்பற்றியது. ஆனால் ஆலை திறக்கப்படவில்லை. மாறாக 2017-ம் ஆண்டு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மற்றொரு யூனிட்டும் மூடப்பட்டது. இதனால் ஏராளமான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். 2018-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டத்தை ஊழியர்கள் முன்னெடுத்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஊழியர்கள் கடிதம் எழுதினர். அதில் ``எங்கள் வாழ்க்கையைக் கண்ணியமாக வாழ முடியவில்லை என்றால் இறப்பதே மேல்” என அனுப்பினர். இந்த பேப்பர் மில்லால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 51 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிஸ்வாஜித் மஜும்தார் மரணம் அஸ்ஸாம் பேப்பர் மில் ஊழியர்களின் நிலையை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது. இவர் ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த 28 மாதங்கள்  ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் நாகோன் ஆலைக்குச் சொந்தமான ஊழியர்களின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 29-ம் தேதி நீண்ட நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் கதவில் தற்கொலைக்காக காரணத்தை எழுதியிருந்தார். அதில் ``நான் செல்கிறேன், எனது மரணத்துக்கு இந்திய அரசாங்கம்தான் காரணம்” என எழுதியுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தற்கொலைக்கடிதம்

இவரது மரணத்துக்கு முந்தைய நாள் தான் அதே காகித ஆலையில் பணியாற்றிய டெக்னீசியன் ஒருவர் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளார். இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பேசுகையில், ``நிதி  சிக்கலே இந்த மரணத்துக்குக் காரணமாக உள்ளன. கடந்த 28 மாதங்களாகச் சம்பளம் இல்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. எங்களுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் கண்முன்பே மரணிப்பது வேதனையான ஒன்றாக உள்ளது” என்கின்றனர்.