`இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்க வாய்ப்பில்லை!’ - கெவின் கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல் | neenu gave statement in kevin murder case

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (03/05/2019)

கடைசி தொடர்பு:14:25 (03/05/2019)

`இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்க வாய்ப்பில்லை!’ - கெவின் கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல்

கடந்த வருடம் மே மாதம் மொத்த கேரளாவையும் உலுக்கியது கெவின் ஆணவப் படுகொலைச் சம்பவம். கோட்டயத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப், நீனு சாக்கோ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது பிடிக்காத நீனுவின் குடும்பத்தினர் மற்றும் சகோதரர் திட்டமிட்டு கெவினை கடத்தி சித்ரவதை செய்துள்ளனர். கடத்தியவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற கெவின் தென்மலை பகுதியில் உள்ள சாலியாற்றில் விழுந்து இறந்துள்ளார். அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் கெவின் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றே குறிப்பிடப்பட்டது.

கெவின் - நீனு

கெவின் தவறி விழுந்து உயிரிழக்கவில்லை அவரை நீனுவின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் சேர்ந்துதான் கொலை செய்தனர் எனக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் காந்திநகர் முன்னாள் காவல் ஆய்வாளரும் ஈடுபட்டிருந்ததார். கெவின் கொலை கேரள சட்டமன்றத்திலும் பேசப்பட்டது. இந்தக் கொலை வழக்கு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நீனுவின் தந்தை ஜான் சாக்கோ மற்றும் சகோதரர் ஷானு சாக்கோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். 

கொலை செய்யப்பட்ட கெவின்

கெவின் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் நேற்று அவரின் மனைவி நீனு மற்றும் முக்கியமான சில சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நீனு அளித்த வாக்குமூலத்தில், `` நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு என் தந்தை காந்தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு விளக்கம் அளிப்பதற்காக நானும் கெவினும் காவல் நிலையம் சென்றிருந்தோம். அப்போது காவல் ஆய்வாளர் சிபு, கெவினைப் பார்த்ததும் அவனது கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். என் தந்தை சாக்கோ, என்னையும் கெவினையும் சேர்ந்து வாழ விடமாட்டேன் எனக் கூறினார். பிறகு காவல் ஆய்வாளர் என்னை என் தந்தையுடன் போகும்படி வற்புறுத்தினார். ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன். தொடர்ந்து என்னுடைய விருப்பப்படிதான் கெவினுடன் செல்கிறேன் எனக் கடிதம் எழுதித் தரும்படி கேட்டார்” இவ்வாறு நீனு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தன் உறவினர் நியாஸும் தன்னை மிரட்டியதாகவும் கெவின் கடத்தப்படுவதற்கு சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தன்னிடம் போனில் பேசியதாகவும் நீனு தெரிவித்துள்ளார்.

கெவின் இறந்த பிறகு அவரது உடலை சாலியாற்றில் இருந்து மீட்டத் தீயணைப்பு வீரர், `கெவின் உடல் மீட்கப்பட்டபோது ஆற்றில் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்புகள் குறைவு’ எனக் கூறியுள்ளார். இந்த வழக்கில் வரும் ஜூன் மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.