’ராகுல் பிறந்ததும் நானே முதலில் தூக்கிக் கொஞ்சினேன்!’ - பிரசவம் பார்த்த வயநாடு நர்ஸ் நெகிழ்ச்சி | I took Rahul in my arm before his parents did, says nurse from wayanad

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (03/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (03/05/2019)

’ராகுல் பிறந்ததும் நானே முதலில் தூக்கிக் கொஞ்சினேன்!’ - பிரசவம் பார்த்த வயநாடு நர்ஸ் நெகிழ்ச்சி

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ராகுல் பிறந்தபோது அவரின் தாய் சோனியா தூக்குவதற்கு முன்பாகவே கைகளில் ஏந்திக் கொஞ்சியது நான்தான் எனத் தெரிவித்துள்ள கேரளா நர்ஸ் ராஜம்மா, ராகுலை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் பெரும் சவாலாகத் திகழ்கிறார் ராகுல் காந்தி. நாடு முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகிறார். தனது வழக்கமான அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல், இரண்டாவதாகக் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். 

தற்போது நான்குகட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் மூன்று கட்டத் தேர்தல்களுக்கான பிரசாரங்கள் தீவிரம் அடைந்திருக்கின்றன. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, தனது பிரசாரங்களில் மோடி அரசின் முறைகேடுகள் பற்றி அதிகமாகப் பேசுகிறார். குறிப்பாக ரஃபேல் விவகாரம், பண மதிப்பிழப்பு போன்ற விவகாரங்களில் பா.ஜ.க அரசைச் சாடுகிறார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ராகுலின் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தைப் பாரதிய ஜனதா கையில் எடுத்திருக்கிறது.

ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் பிறந்தார் என்றும் அவரை முதலில் தூக்கிக் கொஞ்சியது தாம்தான் எனவும் வயநாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நர்ஸ் ராஜம்மா தெரிவித்துள்ளார். நர்ஸிங் படிப்பை முடித்துவிட்டு தனது 23-வது வயதில் அங்கு நர்ஸாகப் பணியில் சேர்ந்திருக்கிறார். அடுத்த சில மாதங்களில், அப்போதைய பிரதமரான இந்திராவின் மருமகள் சோனியா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

1970-ம் வருடம் ஜூன் 19-ம் தேதி ராகுல் காந்தி பிறந்ததாக நர்ஸ் ராஜம்மா நினைவுகூர்கிறார். வாவத்தில் ராஜப்பன் என்ற ராணுவ வீரரை மணந்த நர்ஸ் ராஜம்மா பின்னர் தானும் ராணுவத்தில் சேர்ந்து நர்ஸாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது ராஜம்மாவும் வாவத்தில் ராஜப்பாவும் சொந்த ஊரில் ஓய்வெடுத்து வருகிறார்கள். அவர்களின் ஒரே மகனான ராஜேஷ் மருமகள் சிந்து ஆகியோர் குவைத்தில் பணியாற்றி வருகிறார்கள். 

கேரளா நர்ஸ் ராஜம்மா

சோனியாவுக்குப் பிரசவம் பார்த்தவரான நர்ஸ் ராஜம்மா கூறுகையில், ’’நான் பணிபுரிந்த மருத்துவமனையில் பிரதமரின் மருமகள் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த மருத்துவமனையில் எந்தவித பாதுகாப்பு கெடுபிடிகளும் அப்போது இருக்கவில்லை. சோனியாவும் பிரதமரின் மருமகள் என்கிற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் இயல்பாக நடந்துகொண்டார். அவருக்கு டாக்டர் ஹை என்பவர் பிரசவம் பார்த்தார். அந்த சமயத்தில் நானும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மேரி என்பவரும் பிரசவ வார்டில் நர்ஸாகப் பணியாற்றினோம். அப்போதைய பிரதமரின் குடும்பத்தினர் நாங்கள் பணியாற்றிய மருத்துவமனையில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. 

நாங்கள் எதிர்பார்த்தபடியே ஏறக்குறைய 48 வருடங்களுக்கு முன்பு ஒரு மதியவேளையில் ராகுல் காந்தி பிறந்தார். பச்சிளம் குழந்தையை முதன்முதலில் கைகளில் ஏந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சோனியா தூக்குவதற்கு முன்பாக நான்தான் ராகுலை தூக்கிக் கொஞ்சினேன். அந்த நேரத்தில் எனது மனதில் ஏற்பட்ட சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். பிரசவ வார்டின் வெளியே ராஜீவ் காந்தியும் சஞ்சய் காந்தியும் காத்திருந்தார்கள். மருத்துவமனையின் விதிகளைத் தளர்த்தி அவர்களை உள்ளே சென்று குழந்தையைப் பார்க்க டாக்டர் அனுமதித்தபோதிலும் இருவரும் வெளியே காத்திருந்தார்கள். நானும் சக நர்ஸுகளும் ராகுலை கொஞ்சி மகிழ்ந்த சம்பவங்கள் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 

குட்டிக் குழந்தையாக இருந்த ராகுல் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. என் பேரனைப் போன்ற அவர் இப்போது நான் இருக்கும் இதே தொகுதியில் போட்டியிடுவதை நினைத்து சந்தோசமாக இருக்கிறது. அவரை நான் நிச்சயம் சந்திக்கும்போது அவர் பிறந்தபோது நாங்கள் கொஞ்சி மகிழ்ந்த நினைவுகளைச் சொல்வேன். அவர் இந்தத் தொகுதிக்கு பிரசாரத்துக்கு வந்திருந்தபோது நான் என் மகனைப் பார்க்க குவைத் சென்றிருந்தேன். ராகுல் அடுத்த முறை வரும்போது நிச்சயமாக நேரில் சென்று சந்தித்து அவர் பிறந்த நெகிழ்ச்சியான தருணம் பற்றிப் பேசுவேன். எனக்கு அவரிடமிருந்து எதையும் பெற வேண்டும் என்கிற எண்ணம் கிடையாது. ஆனாலும், இந்தப் பகுதியில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன். 

நர்ஸ் ராஜம்மா

ராகுலை சந்திக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தை இப்பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகரான பி.சி.அசைனர் என்பவரிடம் தெரிவித்தேன். அவர் இது குறித்து மாநில காங்கிரஸ் தலைமையிடம் பேசியிருப்பதால் எனக்கு ராகுலை இரண்டாவது முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்புக்  கிடைக்கும் என நம்புகிறேன். அந்தச் சந்திப்புக்காகக் காத்திருக்கிறேன்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

’நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவள் கிடையாது. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. அதனால் நான் அரசியல்ரீதியாக ராகுலை சந்திக்கவில்லை. என் பேரன் போன்ற அவரைச் சந்திக்கும் விருப்பத்திலேயே அவருக்காகக் காத்திருக்கிறேன்’ என்று சொல்லும் ராஜம்மாவிடம், ‘நீங்கள் ராகுலுக்கு வாக்களிப்பீர்களா’ என்று கேட்டதும், ‘என் பேரனுக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்கு வாக்களிப்பேன்’ எனத் திருப்பிக் கேட்டுச் சிரிக்கிறார் ராஜம்மா.