`ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கர்; மேற்குவங்க ரெஜிஸ்ட்ரேஷன்! - கொல்லம் போலீஸை அலறவிட்ட கார் | Kollam police taken into custoday of a car with osama binladen's sticker

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (03/05/2019)

கடைசி தொடர்பு:16:41 (03/05/2019)

`ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கர்; மேற்குவங்க ரெஜிஸ்ட்ரேஷன்! - கொல்லம் போலீஸை அலறவிட்ட கார்

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், தீவிரவாதி ஒசாமா பின்லேடன் படம் கொண்ட ஸ்டிக்கருடன் சுற்றித்திரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கருடன் கார்

Photo Credit: Mathrubhumi

கொல்லம் இரவிபுரம் பகுதியில், ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கருடன் ஒரு கார் சுற்றிவருவதாக அப்பகுதி போலீஸாருக்குத் தகவல் வந்தது. அந்தக் காரை படமெடுத்த இளைஞர் ஒருவர், அந்தப் புகைப்படத்தை போலீஸாருக்கு அனுப்பிவைத்தார். அந்தக் காரில் 3 பேர் பயணிப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. மேலும், அந்த கார் மேற்குவங்க மாநிலப் பதிவெண் கொண்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் பரபரப்பான போலீஸார், அந்தக் காரை சுற்றிவளைத்தனர். 

காரில் பயணித்தவர்களைக் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில், கொல்லத்தின் பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்தக் காரை வாடகைக்கு எடுத்ததாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். திருமண விழா ஒன்றுக்காக காரை வாடகைக்கு எடுத்ததாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்குறித்து விசாரித்ததில், அந்தக் காருக்கு சொந்தக்காரர் பள்ளிமுக்கு பகுதியை அடுத்த முண்டக்கல்லைச் சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், மேற்குவங்க மாநிலத்தில் அந்தக் காரை கடந்த ஓராண்டுக்கு முன்னர் வாங்கியதாகவும், ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கரை சமீபத்தில் ஒட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கேரளா போலீஸ்

 

அதேநேரம், கேரளாவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த காருக்கு மாநில போக்குவரத்துத் துறையிடம் இருந்து தடையில்லாச் சான்று பெறாதது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அந்த நபரை போலீஸார் விடுவித்திருக்கிறார்கள். வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும், தேவைப்படும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சொல்லி நாசரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மேற்குவங்கப் பதிவெண் கொண்ட காரால் கொல்லம் நகரில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உளவுத் துறையும் விசாரணையில் களமிறங்கி இருப்பதாக கேரள போலீஸார் தெரிவித்தனர்.