பிரக்யா சிங்கை பா.ஜ.க களமிறக்கியது ஏன்?- யெச்சூரி வெளியிட்ட தகவல் | Hindus are violent, Ramayana & Mahabharata are proof of that: Sitaram Yechury 

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (03/05/2019)

பிரக்யா சிங்கை பா.ஜ.க களமிறக்கியது ஏன்?- யெச்சூரி வெளியிட்ட தகவல்

ந்துக்களும் வன்முறையாளர்கள்தான் என்றும், ராமாயணமும் மகாபாரதமுமே அதற்குச் சான்று என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். 

மகாபாரதத்திலும் வன்முறை

மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான, பிரபல பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவரை மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக வேட்பாளராகக் களமிறக்கியது பா.ஜ.க. 

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட சாத்வி பிரக்யா சிங், தேர்தல் நடத்தை விதிகளை மீறிப் பேசிவருவதாகப் பல இடங்களில் புகார் கூறப்பட்டது. மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு காவல் படையின் அதிகாரி ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால்தான் உயிரிழந்தார் என்று பேசியது, அயோத்தியில் இருந்த அவமானச் சின்னத்தை இடித்துத் தள்ளியதில் பெருமை அடைகிறேன் என்று பேட்டி அளித்தது என அவரது சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக, சாத்வி பிரக்யா சிங், பிரசாரம் மேற்கொள்வதற்குத் தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்தது. ஆனால், அதன் பின்னரும் அவர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுவருகிறார். 

சாத்வி பிரக்யா சிங்

இந்த நிலையில், சாத்வி பிரக்யா சிங்கின் இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்து, தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சீதாராம் யெச்சூரி,  "இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என சாத்வி பிரக்யா சிங் கூறுகிறார். இந்த நாட்டில் ஏராளமான மன்னர்களும் இளவரசர்களும் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்துக்களும் வன்முறையாளர்கள்தான். ராமாயணமும் மகாபாரதமும்கூட யுத்தங்களாலும் வன்முறைகளாலும் நிரம்பியதாக இருப்பதை அதற்கு உதாரணமாகக் கூறலாம். 

ஒரு பிரசாரகராக நீங்கள் ( சாத்வி பிரக்யா சிங்) இதிகாசங்களை விளக்கிப் பேசலாம். ஆனால், இந்துக்கள் வன்முறையாளர்கள் அல்ல என்று இன்னமும் கூடவா சொல்கிறீர்கள்? வரலாறு உண்மையா என்று சரி பார்க்காது என்பதால், இந்துக்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை எனக் கூறுவீர்களேயானால், அது தவறானது. 

ஒரு மதம் வன்முறையில் ஈடுபடுகிறது என்றும், இந்துக்களாகிய நாம் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்றும் எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள்? ஓட்டுக்காக பா.ஜ.க தனது பிரிவினைக் கொள்கைகள்மூலம் இந்த சமூகத்தைப் பிளவுபடுத்தப் பார்க்கிறது. 

சீதாராம் யெச்சூரி

முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன், அரசியல் சாசனப் பிரிவு 35 ஏ மற்றும் 370 ஆகியவற்றை ஒழிக்க வேண்டும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் போன்ற இந்துத்வா செயல்திட்டத்தை பா.ஜ.க மீண்டும் கையிலெடுத்துவிட்டது. மூன்றாம் கட்டத் தேர்தல் முடிவடைந்த பின்னர், மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காக சாத்வி பிரக்யா சிங்கை போபால் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது பா.ஜ.க" என்று கூறியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க