`கனடா பாஸ்போர்ட் இருப்பதை ஒருநாளும் மறைத்ததில்லை!' - சர்ச்சைக்கு அக்ஷய் குமார் விளக்கம் | Akshay Kumar On Row Over Citizenship

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (03/05/2019)

கடைசி தொடர்பு:06:54 (04/05/2019)

`கனடா பாஸ்போர்ட் இருப்பதை ஒருநாளும் மறைத்ததில்லை!' - சர்ச்சைக்கு அக்ஷய் குமார் விளக்கம்

வாக்களிக்கவில்லை என்ற தன்மீதான தொடர் குற்றச்சாட்டுக்கும், சர்ச்சைக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொந்தளிப்புடன் பதிலளித்துள்ளார். 

அக்ஷய் குமார்

மும்பையில் உள்ள ஆறு நாடாளுமன்றத் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பெரும்பாலான பாலிவுட் நடிகர்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி வாக்களிக்கவந்திருந்தார். ஆனால், அக்ஷய் வரவில்லை. இது விவாதப்பொருளானது. பிளாங் திரைப்பட திரையிடல் மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அக்ஷய் குமாரிடம் செய்தியாளர் ஒருவர், ``நீங்கள் வாக்குப்பதிவு செய்யாதது குறித்து சர்ச்சை நிலவுகிறதே, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், சிரித்த முகத்துடன், `முன்னே செல்லுங்கள்’ என்று கூறி பதிலளிக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துசென்றார்.

ட்விட்டர்

`வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த அக்ஷய் இவ்வாறு செய்வதா?’ என்றும் கேள்விகள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்விட்டரில் தனது கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ``என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்கு புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும், மறைத்ததில்லை, யாரிடமும் மறுத்ததுமில்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்குச் செல்லவில்லை என்பது அதே அளவுக்கு உண்மைதான். நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலே செலுத்துகிறேன்.

இத்தனை ஆண்டுகளில் நான் தேசத்தின் மீதான காதலை யாரிடமும் நிருபிக்கவேண்டிய தேவையிருந்ததில்லை. என் குடியுரிமை குறித்து தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட, சட்டபூர்வமான, அரசியலற்ற என் குடியுரிமை யாருக்கும் எந்த விளைவும் ஏற்படுத்தப்போவதில்லை. கடைசியாக, இந்தியாவை வலிமையாக்க சிறிய அளவிலான எனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்துவேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அக்ஷய் குமார், `டாய்லெட்’, `எக் ப்ரேம் கதா’, `பேட் மேன்’ உள்ளிட்ட சமூக கருத்துகளை தாங்கிய படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.