`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் | Agitation on the central government over discrimination against the people of Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (03/05/2019)

கடைசி தொடர்பு:09:15 (04/05/2019)

`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

த்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ரயில்வே  துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில் 2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தெற்கு ரயில்வே - மத்திய அரசு

அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில் இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில் வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், ``வட மாநில இளைஞர்களை, தமிழகத்தில் கோவை, திருச்சி பொன்மலை, சென்னை பெரம்பூர் ஆகிய மூன்று ரயில்வே பணிமனைகளில் பணியமர்த்தி வருகிறது, ரயில்வே துறை. இதில் பொன்மலையில் 325 பேரை பணிக்கு எடுத்துள்ளது. அதில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லையென்பது மிகவும் வேதனையான நிலை. இந்தத் துறை மட்டுமல்ல... வருமானவரித் துறை, பி.ஹெச்.எல் உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் கடந்த  ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை இருந்துவருகிறது. 

மணியரசன் தமிழ்தேசிய பேரியக்கம்

அதற்குக் காரணம், தமிழர்களைப் பகையினமாக இந்த ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய சம்ஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளைத் திணிக்க இப்படியான செயல்களில் இறங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு. மேலும் வடநாட்டு வரலாறுகளைத் தவிர, தமிழர்களின் வரலாறுகள் நிலைத்துவிடக் கூடாது என்றும் இந்த அரசாங்கம் கருதுகிறது. தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் ஆரியத்தோடு இணைந்துபோகிற ஒன்றாக இருப்பதன் விளைவாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மொழி, மதம், இனம் போன்றவற்றுக்குத் தமிழர்கள் போட்டியாக இருக்கிறார்கள். அதனால், அந்த இனத்தை அழிக்க மேற்கொள்ளப்பட்ட சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசின் இந்த நடவடிக்கை. மேலும், `இன ஒதுக்கல் குழு' நடவடிக்கையாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கைத் தடுக்கவே போராட்டம் நடத்தியுள்ளோம். தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும். ஆனால் இங்குத் தமிழர்களை தவிர, மற்றவர்கள்தான் ஆதிக்கம் செய்கிறார்கள். 

பிற மாநிலங்கள் 1986-ம் ஆண்டே சட்டம் கொண்டுவந்துள்ளன. அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாக இருந்தாலும், மாநில அரசுப் பணியாக இருந்தாலும், சொந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. அதே போன்றதொரு சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது" என்றார்.

இதே போன்று, இதற்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 

தமிழர்கள்   தமிழக வேலை தமிழருக்கே

அதில், ``மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், இந்தியைத் திணிப்பதன் ஒரு பகுதியாக இதைத் தொடர்ந்து பி.ஜே.பி. அரசு அதைச் செய்து வருவதாகவும் பதிவாகியுள்ளது. இதை எதிர்க்கும் விதமாக நெட்டிசன்கள் #தமிழக வேலைத் தமிழருக்கே என்ற ஹெஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர்.

அதோடு, ஆளும் பி.ஜே.பி. அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்களைப் பதிவுசெய்வதோடு, அதுகுறித்த பதிவுகள் மற்றும் புகைப்படங்கள், வட மாநிலத்தவருக்கு வழங்கப்பட்ட பணியின் புள்ளிவிவரங்கள் போன்றவற்றையும் தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்