`வாசிப்பாளரைவிட எழுத்தாளர்கள் அதிகரிப்பது ஆபத்தானது!' - ரஸ்கின் பாண்ட் | danger of having more writers than readers - Ruskin Bond

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (04/05/2019)

`வாசிப்பாளரைவிட எழுத்தாளர்கள் அதிகரிப்பது ஆபத்தானது!' - ரஸ்கின் பாண்ட்

'இந்தியாவில், வாசிப்பாளர்களைவிட எழுத்தாளர்கள் அதிகம் உருவாவது ஆபத்தானது' எனப் பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் கூறியுள்ளார்.

ரஸ்கின் பாண்ட்

பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில கற்றல் பயன்பாடுகுறித்த 'myELSA’ஆப் வெளியிட்டு விழாவில், இந்தியாவின் தலைசிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளியான  ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) கலந்துகொண்டார். அப்போது, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில், பதிப்புத் துறை என்பது நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது, இளம் எழுத்தாளர்களுக்கு ஆதாயமானது.  தற்போது, ஏராளமானவர்கள் எழுதிவருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை வாசிப்பாளர்களைவிட எழுத்தாளர்கள் அதிகம் உருவாவது ஆபத்தானது.  

எழுத்தாளர்களுக்கு மொழியின்மீது நம்பிக்கை இருப்பது அவசியம். அப்போதுதான் நீங்கள் ஏதாவது சொல்ல வருகிறீர்கள் என்றால், அதுகுறித்து தெளிவாக ஆராய முடியும். தெளிவு என்பது மிகவும் முக்கியமானது.  தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் e-books இருந்தாலும்  வாசிப்பாளனுக்கு அச்சிடப்பட்ட புத்தகத்தின்மீதுதான் காதல் இருக்கும். அது தான் முதல் தேர்வாக இருக்கும். இ-புத்தகம் மற்றும் ஆப்கள் மக்களிடம்  படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும். இந்த டிஜிட்டல் தளங்கள் வாசிப்பாளருக்கு ஒரு சௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால், அச்சிடப்பட்ட புத்தகங்கள் மகிழ்ச்சியான வாசிப்புக்கு ஒரு வடிவமாக இங்கே உள்ளன” என்றார்.

ரஸ்கின் பாண்ட் சிறார்களுக்காக ஏராளமான இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார். மலையடிவாரமும், மலைச்சாரலும் இவரது படைப்புகளின் மையச்சூழலாக இருக்கும்.   “அவர் ட்ரீஸ் ஸ்டில் குரோ இன் டெஹ்ரா” (Our trees still grow in Tehra) என்ற சிறுகதை தொகுப்புக்காக 1992-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். த டைகர் இன் த டனல்,  த ரோட் டு சிம்லா ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும்.