பகலில் ஓட்டுநர்...இரவில் வழிப்பறி! - மும்பைவாசிகளைக் குறிவைத்து கொள்ளையடித்த புனே இளைஞர் | Pune cab driver by day, robber by night

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/05/2019)

கடைசி தொடர்பு:20:00 (04/05/2019)

பகலில் ஓட்டுநர்...இரவில் வழிப்பறி! - மும்பைவாசிகளைக் குறிவைத்து கொள்ளையடித்த புனே இளைஞர்

புனே-யைச் சேர்ந்த பப்பு காம்லே, காலையில் கார் ஓட்டுநராகவும்  இரவில் வழிப்பறிக் கொள்ளையனாகவும் இருந்துவந்துள்ளார். தனியார் நிறுவனத்திற்காகக் காலையில் கார் ஓட்டும் இவர், இரவு நேரத்தில் சாலையில் செல்பவர்களுக்கு  லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 கொள்ளையன் கைது

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி, தொழிலதிபரான பிரதாப் மற்றும் அவரது சகோதரர்கள், அதிகாலை 12.30 மணிக்கு மும்பை செல்வதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அவர்கள் அருகே ஒரு கார் வந்து நின்றுள்ளது. காரில் இருந்த பப்பு, லிஃப்ட் கொடுப்பதாகவும் மும்பை செல்வதற்கு 300 ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார். அதிகாலை என்பதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர். ஏற்கெனவே காரில் இரண்டு பேர் இருந்துள்ளனர். புனே - மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார், சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.  காரில் இருந்தவர்கள், தொழிலதிபரான பிரதாப்பை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் இருந்த 20,000 ரூபாய் மற்றும் விலையுயர்ந்த சில பொருள்களையும் கொள்ளையடித்துள்ளனர். 

பணத்தைப் பறிகொடுத்த பிரதாப், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் கொடுத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பப்பு காவல் துறையினரிடம் பிடிபட்டார். அவரிடமிருந்து வங்கிக் கணக்கு புத்தகம், ஸ்மார்ட் போன் ஆகியவற்றைக் கைப்பற்றினர். விசாரணையில், கடந்த  மாதம் ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை 10 பயணிகளிடம் வழிப்பறி செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகப் பேசிய காவல் துறையினர், ``இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் மும்பையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். செல்போன் மற்றும் சிறிய அளவிலான தொகையைப் பறிகொடுத்தால், அவர்கள் யாரும் போலீஸில் புகார் அளிக்கவில்லை. பிரதாப் கொடுத்த புகாரின் பேரில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பப்பு காம்லே மற்றும் அவனது கூட்டாளியையும் கைதுசெய்துள்ளோம்'' என்றனர்.