டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த நபர்! - வாகனப் பேரணியில் பரபரப்பு | Man slapped Delhi CM Arvind Kejriwal

வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (04/05/2019)

கடைசி தொடர்பு:19:04 (04/05/2019)

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த நபர்! - வாகனப் பேரணியில் பரபரப்பு

பேரணியின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரசார வாகனத்தின் மீதேறி கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கெஜ்ரிவால்

Photo: ANI

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு, 6-வது கட்டமாக வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அங்கு பி.ஜே.பி - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா  உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவந்தனர். மோதி நகர் பகுதிக்கு பேரணி வந்துகொண்டிருந்தது. மக்களை நோக்கி கைகளை அசைத்த வண்ணம் திறந்த வாகனத்தில் கெஜ்ரிவால் வந்துகொண்டிருந்தார்.

கெஜ்ரிவால்

Photo: ANI

அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்து வாகனத்தில் ஏறிய இளைஞர் ஒருவர், கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த அந்த இளைஞரை உடனடியாக போலீஸார் பிடித்து மோதி நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், அவரது  பெயர் சுரேஷ் என்பது தெரியவந்திருக்கிறது. அவர் என்ன காரணத்துக்காக கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார் என்பது குறித்த விவரம் வெளிவரவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரலில், இதேபோல் டெல்லியில் வாகனப் பேரணியில் கெஜ்ரிவால் ஈடுபட்டபோது, அவர் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.