`ரூ.29 லட்சம் நிதியுதவி; பெட்ரோல் பங்க்' - புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் பெற்றோரிடம் ரூ.1.5 லட்சம் மோசடி! | Pulwama matryar's parents duped one and half lakhs; police begin man hunt

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (05/05/2019)

கடைசி தொடர்பு:08:40 (06/05/2019)

`ரூ.29 லட்சம் நிதியுதவி; பெட்ரோல் பங்க்' - புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் பெற்றோரிடம் ரூ.1.5 லட்சம் மோசடி!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் மாநில வீரர் குல்வீந்தர் சிங்கின் குடும்பத்தினரிடம் ரூ.1.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குல்வீந்தர் சிங் மற்றும் அவரது பெற்றோர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடத்திய தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த விவகாரத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. அதேபோல், இந்தியாவின் தொடர் முயற்சிகளால் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்திருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. 

இந்தநிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பஞ்சாப் வீரர் குல்வீந்தர் சிங்கின் பெற்றோரிடம் நிதியுதவி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.5 லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. குல்வீந்தர் சிங்கின் பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரௌலி கிராமத்தில் வசித்து வருகின்றனர். அங்கு சி.ஆர்.பி.எஃபில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்டு குல்வீந்தர் சிங்கின் பெற்றோரிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், ரூ.1.5 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த  புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 

மோசடி நபரின் சிசிடிவி பதிவு


ரூ.29 லட்சம் நிதியுதவி மற்றும் பெட்ரோல் பங்க் ஒன்றின் அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து ரூ.1.5 லட்சம் பணம் பெற்றிருக்கிறார் அந்த மர்ம நபர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் குல்வீந்தர் சிங்கின் தந்தை தர்ஷன் சிங்கின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றிருக்கிறார். சிசிடிவியில் பதிவான அந்த நபர், வெள்ளை நிற கார் ஒன்றில் வந்ததையும்  போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
இதுகுறித்து பேசிய ரூபார் பகுதி காவல்நிலைய போலீஸ் அதிகாரி ஸ்வபன் ஷர்மா, `தர்ஷன் சிங்கின் மோட்டார் சைக்கிளை பிந்தர் நகர் பகுதியில் கைப்பற்றியிருக்கிறோம். அதேபோல், மோசடி செய்த நபர் வந்த காரைக் கண்டுபிடித்து ஓட்டுநரிடம் விசாரித்ததில், அவருக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்திருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார். சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்து வருகிறோம்'' என்றார்.