6 மணிக்கு வரவேண்டிய ரயில், வந்தது 2.30 மணிக்கு! - நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் | Train late causes problem for karnataka neet aspirants

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/05/2019)

கடைசி தொடர்பு:19:04 (05/05/2019)

6 மணிக்கு வரவேண்டிய ரயில், வந்தது 2.30 மணிக்கு! - நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவுக்கு வர வேண்டிய ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரத்துக்கு மேலாகத் தாமதமாக வந்ததால், 200க்கும் மேற்பட்ட நீட் தேர்வு எழுத முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது. 

நீட் தேர்வெழுத மாணவர்கள் பயணித்த ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

Photo: India Rail Info

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் 1.30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால், பெங்களூருவில் நீட் தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஹூப்ளியில் வரை செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் - 16591) ரயிலில் 200க்கும்  மேற்பட்ட மாணவர்கள் பெங்களூருவுக்குப் பயணம் செய்தனர். பெங்களூருவுக்கு காலை 6 மணிக்கு வந்தடைய வேண்டிய அந்த ரயில் 6 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்தது. இதனால், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுத முடியாமல் போனது. 

கோவையில்  நீட் தேர்வெழுதிய மானவர்கள்

இந்த விவகாரத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, இந்த விவகாரத்துக்கு உங்கள் சக அமைச்சரான பியுஷ் கோயலே பொறுப்பேற்க வேண்டும் என்று மோடியை டேக் செய்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். 
அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணியால் ரயில் தாமதமாக வந்ததாகவும், இதுகுறித்த தகவல் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் மூலமாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் ரயில்வே விளக்கமளித்திருக்கிறது. இதனால், கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக வந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்தத் தேர்வை எழுத முடியாமல் போனதுதான் சோகம்.