ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 51 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு! | Fifth phase of election for 51 constituencies

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/05/2019)

கடைசி தொடர்பு:22:00 (05/05/2019)

ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 51 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு!

சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி , ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ உள்ளிட்ட 51 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 11-ம் தேதித் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வேலூர் தவிர்த்த மற்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்தது. இந்தியா முழுமைக்கும் இதுவரை 4 கட்டங்களாக தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகள், காங்கிரஸ் சமீபத்தில் ஆட்சியைக் கைபற்றிய ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் 12 மற்றும் 7 தொகுதிகள் வீதத்திலும், மேற்குவங்காளத்தில் 7 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதி, காஷ்மீரில் 2 தொகுதி என மொத்தம்  51 தொகுதிகளுக்கு ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

ராகுல்,சோனியா

ரேபரேலி தொகுதியில் சோனியாவுக்கு வெற்றி எளிமையாகவே கைகூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில்தான் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடு கிறார் அவர் கடந்த தேர்தலிலும் அதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.