`எனது அழைப்பை ஏற்கவில்லை; புயலை வைத்து அரசியல் செய்கிறார்!' - மம்தாவை சாடும் மோடி | Mamata Didn't Respond To My Calls On Cyclone, alleges Modi

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (06/05/2019)

கடைசி தொடர்பு:16:50 (06/05/2019)

`எனது அழைப்பை ஏற்கவில்லை; புயலை வைத்து அரசியல் செய்கிறார்!' - மம்தாவை சாடும் மோடி

``ஃபானி புயல் ஏற்படுவதற்கு முன்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டேன் அவரது அகந்தையின் காரணமாக என்னுடன் பேச மறுத்துவிட்டார்'' எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோடி

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இந்தக் கோடை காலத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிஷா மாநிலம் பூரி பகுதியில் சுமார் 170 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. ஆக்ரோஷமாக வந்த புயல் மரங்கள், சாலையில் இருந்த வாகனங்கள், கட்டடங்களின்  மேற்கூரைகள் ஆகியவற்றைத் தனது வேகத்தில் தூக்கி வாரிக்கொண்டு சென்றது. புயலுடன் மழையும் பெய்தது. கடலோரப் பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டனர். கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவைத் தாக்கும் மிகப் பெரும் கோடைப் புயல் இது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.  


தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேற்குவங்கத்தில் புயலின் பாதிப்புகள் இருந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா, புயலால் மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.  நிவாரணப் பணிகள் குறித்து ஒடிஷா முதல்வர், மேற்குவங்க ஆளுநருடன் பேசும் பிரதமர் மோடி தன்னிடம் பேச மறுப்பதாக மம்தா குற்றம்சாட்டினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் அலுவலகம், மேற்கு வங்க முதல்வரைப் பிரதமர் தொடர்புகொண்டபோது அவர் அங்கு இல்லை, பிரசாரத்தில் இருப்பதாக பதில் வந்தது என தெரிவித்தது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி ஒடிஷாவில் புயல் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்தார்.

ஒடிசா

இதன்பின்னர் மேற்குவங்கத்தில் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி,  ``மேற்கு வங்கத்தின் வேகத்தடை மம்தா. ஃபானி புயலிலும் அவர் அரசியல் செய்யப் பார்க்கிறார். அவர் தன்னுடைய அகந்தையின் காரணமாக என்னுடன் பேச மறுக்கிறார். புயல் ஏற்படுவதற்கு முன்பாக நான் மம்தாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அவர் அங்கு இல்லை எனப் பதில் வந்தது. நான் அவருடைய அழைப்புக்காகக் காத்திருந்தேன். அவரிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. பெங்கால் மக்கள் மீது எனக்குக் கவலை இருந்தது. எனவேதான் அவரை மீண்டும் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது மம்தா பேசுவதை தவிர்த்துவிட்டார்” என மோடி தெரிவித்தார்.