காலாவதியாகும் பிரதமருடன் பேச விருப்பமில்லை - மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிரடி | I do not consider him prime minister now - Mamata Banerjee

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (06/05/2019)

கடைசி தொடர்பு:19:10 (06/05/2019)

காலாவதியாகும் பிரதமருடன் பேச விருப்பமில்லை - மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிரடி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வை வீழ்த்துவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க-வுக்கு, மம்தாவுக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தார். இதையெல்லாம் சமாளித்துத்தான் பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான ஃபானி புயல் ஒடிஷாவைத் தாக்கியது. அங்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்திலும் பாதிப்புகள் இருந்தது. புயல் சென்ற பிறகு பிரதமர் ஒருமுறைகூட பேசவில்லை. நிவாரணப் பணிகள் குறித்து மேற்குவங்க ஆளுநருடன் பேசும் மோடி தன்னிடம் பேச மறுப்பதாகக் குற்றம்சாட்டினார் மம்தா. இதற்குப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனே மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தொடர்புகொண்டபோது அவர் பிரசாரத்தில் இருந்தாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றனர்.

மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, புயலிலும் மம்தா அரசியல் செய்கிறார். புயலுக்கு முன்பாக நான் அவரைத் தொடர்புகொண்டேன் அவர் இல்லை என பதில் வந்தது. அவரது அழைப்புக்காகக் காத்திருந்தேன் ஆனால், அகந்தையின் காரணமாக அழைக்கவில்லை என்றார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மம்தா, “ ஃபானி புயல் தொடர்பாகப் பிரதமர் என்னைத் தொடர்புகொண்டபோது நான் காரக்பூரில் இருந்தேன். அதன் காரணமாக என்னால் பேசமுடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் காலாவதியாகப்போகும் பிரதமருடன் பேச நான் விரும்பவில்லை. அவர் மீண்டும் பதவிக்கு வரமாட்டார். அவர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். அவருடன் நான் எதையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. நான் அவரை ஒரு பிரதமராக கருதவில்லை. தேர்தல் முடியட்டும் புதிய பிரதமர் வருவார். நான் அவருடன் பேசிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.