``குப்பை மலை!” - டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சுற்றுலாத் தலம் | Ghazipur garbage dump almost as tall as the ancient Qutub Minar

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (07/05/2019)

கடைசி தொடர்பு:12:36 (07/05/2019)

``குப்பை மலை!” - டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சுற்றுலாத் தலம்

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், பொதுமக்கள் சென்று பார்க்கக்கூடிய நிறைய சுற்றுலாத்தலங்கள் உள்ளன.  இந்தியா கேட், லோதி கார்டன், குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை போன்ற பல இடங்கள் இருந்தும், தற்போது புதிதாக ஒரு சுற்றுலாத் தலத்தை உருவாக்கியுள்ளனர் டெல்லி மக்கள்.

டெல்லி குப்பை மலை

இந்தியாவிலேயே அதிகம் மாசுபாடுள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது டெல்லிதான். அங்குள்ள காசிப்பூர் பகுதியில், மிகப்பெரும் குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. டெல்லி முழுவதிலும் உள்ள அனைத்துக் குப்பைகளும் சேகரிக்கப்பட்டு, காசிப்பூரில் கொட்டப்படுவது வழக்கம். ஒரு நாளுக்கு சுமார்  100 டன் குப்பைகளாவது அங்கு கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

குதூப் மினார்

தினமும் குப்பையைக் கொட்டிக் கொட்டி, தற்போது அந்தக் குப்பை மலையாகவே  உருவாகியுள்ளது.  கடந்த 1984-ம் ஆண்டு முதல், அந்த இடத்தில் குப்பை கொட்டப்பட்டுவருகிறது. இதன் விளைவாக, பழைமையான வரலாற்றுச் சின்னமான குதூப் மினாரின் உயரத்தைத் தொட்டுள்ளது காசிப்பூர் குப்பைமலை.   (குதூப் மினார் 73 மீட்டர் உயரம் கொண்டது)

கூகுளில் குப்பை மலை

கூகுளில், குப்பைமலை (Mountain Of Garbage) எனத் தேடினால், காசிப்பூர் பகுதி வந்துவிடுகிறது. கூகுளில் காட்டும் அந்த இடத்தை டெல்லி மக்கள் நகைச்சுவையாக விமர்சித்து, அதற்கு முழு மதிப்பீடு (rating) வழங்கியுள்ளனர்.

குப்பை மலை

மேலும், ‘ காசிபூர் குப்பைமலை மிகச் சிறந்த சுற்றுலாத் தலம், இங்கு மக்கள் குடும்பத்துடன் வந்து ரசிக்கலாம்’,  ‘ இதுதான் உலகிலேயே எட்டாவது அதிசயம்’, இமயமலைக்குப் போக முடியவில்லை என யாரும் வருந்த வேண்டாம், டெல்லி குப்பைமலைக்கு வாருங்கள் போதும், இதுவும் அழகுதான்’ என்பதுபோன்ற பல விமர்சனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.  

மதிப்பீடு