ஒரேயொரு வீடியோ...! - தொடர் போராட்டமே வாழ்க்கையாகிப்போன ராணுவ வீரர்! | Sacked BSF jawan moved to Supreme Court

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (07/05/2019)

கடைசி தொடர்பு:16:10 (07/05/2019)

ஒரேயொரு வீடியோ...! - தொடர் போராட்டமே வாழ்க்கையாகிப்போன ராணுவ வீரர்!

தேஜ் பகதூரின் ஒரே மகனான ரோஹித்தின் கல்லூரிப்படிப்புக் கட்டணத்தைக் கட்டுவதற்கும் சிரமப்பட்டார். இதனால் பெரிய மன உளைச்சலோடு இருந்தவன், கடந்த ஜனவரி மாதத்தில் பூட்டிய அறையினுள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தேஜ் பகதூர் யாதவ் நினைவிருக்கிறதா? கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவரது வாழ்க்கையில் தொடர்ச்சியாகப் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். 

தேஜ் பகதூர் யாதவ்

பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லை. அவரால் வழக்கறிஞருக்கு கட்டணத்தைக்கூட செலுத்த இயலவில்லை. வருமான இழப்பால் அவரது குடும்பம் பெருத்த பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதைச்சமாளிக்க அவரது சொந்த ஊரிலுள்ள 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தார். ஆனால், அதிலிருந்து பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. தேஜ் பகதூரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு சரியான சிகிச்சையளிப்பதற்கும் நிதி நெருக்கடியாக இருந்தது.

தேஜ் பகதூரின் ஒரே மகனான ரோஹித்தின் கல்லூரிப்படிப்புக் கட்டணத்தைக் கட்டுவதற்கும் சிரமப்பட்டார். இதனால் பெரிய மன உளைச்சலோடு இருந்த அவரின் மகன் கடந்த ஜனவரி மாதத்தில் பூட்டிய அறையினுள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மகன் தற்கொலை செய்துகொண்ட தருணத்தில் தேஜ் பகதூர் கும்பமேளாவில் கலந்துகொள்ள பிரயாக்ராஜ் நகருக்குச் சென்றிருந்தார்.

மோடி

தொடர்ச்சியான பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட தேஜ் பகதூர், தனது பணி இழப்புக்குக் காரணமான மத்திய அரசுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்க முடிவுசெய்தார். நடைபெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். தேர்தல் செலவுக்குப் பணமில்லாததால், தன்னை ஆதரிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவளித்து, தனது கட்சியின் வேட்பாளராக அறிவித்தார். இந்த நிலையில், ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சில ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தவறியதாகக்கூறி அவரது வேட்புமனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது. தற்போது இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

வீடியோ வெளியிட்ட நாள் முதலாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரரின் வாழ்க்கையில் வீசத்தொடங்கிய சூறாவளி இன்னமும் ஓய்ந்த பாடில்லை. தன்னால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனாலும்கூட தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடிக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம் செய்வேன் என்று அறிவித்துள்ளார்.