முடிவுக்கு வந்தது தலைமை நீதிபதி மீதான புகார்! தொடங்கிவிட்டது பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் | Chief justice gets clean chit without full enquiry

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (07/05/2019)

முடிவுக்கு வந்தது தலைமை நீதிபதி மீதான புகார்! தொடங்கிவிட்டது பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம்

இந்தியாவின் தலைப்புச்செய்தியாக சில தினங்களாகத் தொடர்ந்து வந்த ஒரு செய்திக்கு முற்றும் போடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி மீதான பெண் ஒருவரின் பாலியல் சீண்டல் தொடர்பான குற்றச்சாட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், எட்டப்பட்ட முடிவும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னிடம் தவறாக நடக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முயன்றதாகவும், அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால், ஒரே வாரத்தில், மூன்று இடங்களுக்குப் பணிமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணியிலிருந்து நீக்கியதாகவும் நீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண் புகார் அளித்தார். 

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியே இதை விசாரித்தார். அந்தப் பெண்ணின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதி மீது அவதூறு பரப்ப தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் பேரம் பேசினார் என்றார். வழக்கறிஞரின் இந்தப் புகார் தொடர்பான வழக்கு, அந்தப் பெண்ணின் புகார் மீது உட்குழு விசாரணை என்று இந்த விவகாரம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி பயணித்திருக்கிறது. 

திடீர் திருப்பமாக, புகார் அளித்த பெண் இந்த விசாரணையில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில், ``ரகசியமாக நடத்தப்படும் விசாரணையில் என்னுடன் வழக்கறிஞர் இருப்பதையும் உதவி நபர் இருப்பதையும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தனியாக விசாரணையைச் சந்திக்க எனக்குப் பயமாக உள்ளது. எனக்குக் காது சரியாகக் கேட்காததால் நீதிபதிகளின் கேள்விகளைச் சரியாகப் பின்தொடர முடியவில்லை.

அதுமட்டுமல்லாது நீதிபதிகள் என்னிடம், ஏன் இவ்வளவு தாமதமாக புகார் அளித்துள்ளீர்கள் என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். மேலும் என் தொலைபேசி தரவுகள், வாட்ஸ்அப் மற்றும் பிற உரையாடல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாகவே விசாரணையைப் புறக்கணித்து வெளியேறுகிறேன். தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் என்பதைக் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. இதில் நியாயம் அவசியம்" என்று குறிப்பிட்டிருந்தார். பெண்கள் பாலியல் புகார் சம்பந்தப்பட்ட விசாரணைகளில் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று பல தீர்ப்புகளை எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மீதே, ஒரு பெண் இவ்வாறு விமர்சித்திருப்பது உச்சநீதிமன்றத்துக்கே இழுக்கு என்று பல கண்டனக்குரல்கள் எழுந்தன.

அதே சமயம் புகார் அளித்த பெண் ஆஜராகாமலே விசாரணையைத் தொடர்ந்தது விசாரணைக் குழு. இதுகுறித்து விசாரணைக்குழு தலைவர் போப்டேவை சந்தித்த நீதிபதி சந்திரசூட், புகார் அளித்தவர் இல்லாமல் இந்த விசாரணையைத் தொடரவேண்டாம் எனவும், உச்ச நீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவரை `அமைகஸ் கியூரி’ ஆக நியமித்து, அவரது வழிகாட்டுதலில் இந்த விசாரணையை நடத்துமாறும் தெரிவித்தார்.

ஆனால் அதற்கும், விசாரணைக் குழு செவி சாய்த்ததாக தெரியவில்லை, புகார் அளித்த பெண் இல்லாமலேயே, தலைமை நீதிபதியை இந்தக் குழு விசாரித்தது, அவர் தன் மீதான அனைத்துப் புகார்களையும் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, விசாரணைக் குழு அதன் அறிக்கையை மே மாதம் ஆறாம் தேதி சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், `தலைமை நீதிபதி குற்றம் அற்றவர்’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் செகரட்டரி ஜெனரல் அறிவித்தார். 

தலைமை நீதிபதி

இந்தத் தீர்ப்பில் முடிவு எட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், சர்ச்சைக்குள்ளான விசாரணை முறைகளும், அதைச் சுற்றிய சதி குற்றச்சாட்டுகளும், மேம்போக்கான விசாரணையும், விசாரணை மீதான புகார் அளித்த பெண்ணின் அவநம்பிக்கையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு விவாதங்களை எழுப்பிக்கொண்டே இருக்கும். இந்தச் சம்பவம், தலைமை நீதிபதி என்ற ஒற்றை மனிதரின் மீதான களங்கமல்ல. மாறாக, பெண்கள் பாதுகாப்பு தொடங்கி, உச்சநீதிமன்றத்தின் சுதந்திரம் வரை இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற நிஜத்தின் வெளிப்பாடு. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மீது படிந்துள்ள இன்னொரு களங்கம்.