`உங்களுக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்!' - தவறான ரிப்போர்ட்டால் இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த எய்ம்ஸ் | Patient wrongly told to be HIV+ by AIIMS Rishikesh

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/05/2019)

கடைசி தொடர்பு:18:30 (07/05/2019)

`உங்களுக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்!' - தவறான ரிப்போர்ட்டால் இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த எய்ம்ஸ்

எய்ம்ஸ் மருத்துவமனையின் தவறான அறிக்கையால் நோயாளி ஒருவர் பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கிறார். 

நோயாளி

இல்லாத நோயை இருப்பதாகவும், இருக்கும் நோயை இல்லை என்றும் கூறுவதால், நோயாளிகள் உடல்ரீதியாவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அண்மையில் சாத்தூரில் கர்ப்பிணிப்பெண் ஒருவரின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி கலந்தது பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகங்களின் கவனக்குறைபாடுகள், பெரும் சர்ச்சை ஏற்படுத்தி விடுகின்றன. சிறந்த மருத்துவமனை என்று கூறப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டில் உள்ள பக்வான்பூரைச் சேர்ந்தவர் நஸீம் அலி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு காயம் காரணமாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது ரத்தம் ஒழுங்காக உறையவில்லை என்று கூறி, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அவரும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் அவரது ரத்தத்தைப் பரிசோதித்துள்ளனர். முடிவில், அவரது ரத்தத்தில் ஹெ.ஐ.வி இருப்பதாக அதிர்ச்சியளித்தனர்.

மருத்துவமனை

இதைகேட்டு அதிர்ந்த அவர், மனமுடைந்துபோனார். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறிய அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்ந்தார். அந்த மருத்துவமனையில் அவருக்கு மீண்டும் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. `நஸிம் உங்களுக்கு ஹெச்.ஐ.வி நெகட்டிவாகத்தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மாவட்ட நுகர்வோர் மன்றத்தை நாடினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராகவும், சம்பந்தபட்ட மருத்துவருக்கு எதிராகவும் புகார் அளித்தார். இதை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு 60,000 ரூபாய் இழப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் ஒருமாதகால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

``பாதிக்கப்பட்டவரின் நேரத்தையும், அவரது எனர்ஜியையும் வீணாக்கியதற்காக இந்தத் தொகையைக் கட்ட வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ``மருத்துவமனை சரியான சேவையை வழங்காதது, புகார்தாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நஸிம் அலியின் வழக்கறிஞர் கூறுகையில், ``மருத்துவர்களின் இந்த தவறான அறிக்கையால் பெரும் மன உளைச்சலுக்கும் பாதிப்புக்கும் அவர் ஆளாகியுள்ளார்” என்றார். அதேபோல எய்ம்ஸ் செய்தி தொடர்பாளர் பேசுகையில், `அது அந்த ரிப்போர்டில் இருந்த ஆவணக்குறைபாடுதான். மாவட்ட நுகர்வோர் மையம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்” என்றார்.