`தயாராக இருங்கள்; அடுத்த 5 ஆண்டுகளும் மோடிதான் பிரதமர்!' - மம்தாவுக்கு சவால்விடும் அமித் ஷா | Amit Shah hits back at Mamata

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (07/05/2019)

கடைசி தொடர்பு:20:50 (07/05/2019)

`தயாராக இருங்கள்; அடுத்த 5 ஆண்டுகளும் மோடிதான் பிரதமர்!' - மம்தாவுக்கு சவால்விடும் அமித் ஷா

அமித் ஷா

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். பா.ஜ.க தலைவர்களுக்கும் மம்தாவுக்கு இடையேயான வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தில் உள்ளது. பா.ஜ.க தலைவர்கள் மாநிலத்துக்குள் வருவதையே அவர் விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது அவரது செயல்பாடு. இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போதுகூட அமித் ஷா, யோகி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த நிலையில்தான் ஃபானி புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தைத் தாக்கியது. புயல் பாதிப்புகள் குறித்து ஒடிசா முதல்வருடனும் மேற்கு வங்க ஆளுநருடன் பேசிய மோடி தன்னிடம் பேசவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் மம்தா. இதற்கு உடனே பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. `மேற்கு வங்க முதல்வரைத் தொடர்புகொண்டபோது அவர் அங்கு இல்லை; பிரசாரத்தில் இருந்ததாகப் பதில் வந்தது' எனத் தெரிவிக்கப்பட்டது. 

மோடி

புயல் பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வுசெய்த பிரதமர் மோடி, பின்னர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அப்போது ``புயலுக்கு முன்பாக நான் மம்தாவிடம் பேச இரண்டு முறை தொடர்புகொண்டேன் அவர் அகந்தையின் காரணமாக என்னுடன் பேசவில்லை'' என்றார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய மம்தா, ``மோடி என்னைத் தொடர்புகொண்டபோது நான் பிரசாரத்தில் இருந்தேன். தேர்தல் முடிந்தவுடன் காலாவதியாகப்போகும் பிரதமருடன் பேச நான் விரும்பவில்லை. அவர் மீண்டும் பதவிக்கு வரமாட்டார். புதிய பிரதமருடன் நான் பேசிக்கொள்கிறேன்”என்றார். மம்தாவின் இந்தப்பேச்சு தேசிய அளவில் பரபரப்பானது. மோடியை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தேசியக் கட்சியான காங்கிரஸ் கூட இதுவரை இப்படிப் பேசவில்லை. 

மம்தா

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ``மம்தா உங்களுக்கு அரசியலமைப்பின் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும் பிரதமர் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. நீங்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும் எங்களுக்குப் பிரச்னை இல்லை. தயாராக இருங்கள். மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர்'' என்று பேசியிருக்கிறார்.