`இதே அகந்தைதான் துரியோதனனுக்கும் இருந்தது!’ - மோடியை விளாசிய பிரியங்கா காந்தி! | Modi is Arrogant like Duryodhan, says Priyanka Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (07/05/2019)

கடைசி தொடர்பு:21:40 (07/05/2019)

`இதே அகந்தைதான் துரியோதனனுக்கும் இருந்தது!’ - மோடியை விளாசிய பிரியங்கா காந்தி!

`ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தவர் ராஜீவ்காந்தி’ என பிரதமர் மோடி சாடியதற்கு பிரியங்கா காந்தி, `இதே அகங்காரம்தான் துரியோதனனுக்கும் இருந்தது’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரியங்கா காந்தி

`ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தவர் ராஜீவ்காந்தி’ என பிராசாரத்தின்போது பேசிய மோடி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. `உங்கள் மனதில் உள்ள உங்களைப்பற்றிய எண்ணங்களை என் தந்தை மீது உருவகப்படுத்த வேண்டாம். உங்கள் கர்மா உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது” என ராகுல் விமர்சித்திருந்தார். இந்த விவாதம் பரவலாக இருந்தபோது, நான் உயிரோடிருக்க ராஜீவ்காந்தி தான் காரணம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசிய கருத்துகள் வலம்வந்தன. இந்த நிலையில், அம்பாலாவில் குமாரி செல்ஜாவை ஆதரித்து காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது.

மோடி

இதில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், யார் பெயரையும்  குறிப்பிடாமல், ``இந்த நாடு இப்படியொரு அகங்காரத்தை மன்னிக்காது. துரியோதனனுக்கும்கூட இப்படியொரு அகங்காரம் இருந்தது. கிருஷ்ணா அவருக்குப் புரிய வைக்க முயன்றபோது, துரியோதனன்,  கிருஷ்ணரையே பிணையக் கைதியாக்கிவிட்டார். அவர்கள் தேர்தல் நேரங்களில் கூறும் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றமாட்டார்கள். தியாகிகளின் பெயர்களைப் பயன்படுத்தியும், அவர்களின் தியாகிகளின் குடும்பத்தை இன்சல்ட் செய்தும் வாக்குகளைப் பெற முயற்சி செய்வார்கள்.

உங்களுக்குத் தைரியம் இருந்தால், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்கள் நலன் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள். இந்த தேசத்தின் மக்கள் புத்திசாலிகள், அவர்களை உங்களால் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்’' என்றார். ராஜீவ்காந்தியைப் பற்றி மோடி பேசியது குறித்து கருத்து தெரிவித்த மம்தா, ``ராஜீவ்காந்தி நாட்டுக்காக உயிர்நீத்தவர். உங்களுக்கு அவரை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், பிரிந்து சென்ற தலைவர் குறித்து மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.