``தாமதமாகும் தேர்தல் முடிவுகள்!" - விவிபேட் இயந்திரத்தில் என்ன பிரச்னை? #Loksabha | Election result may be delayed because of tally of vvpat

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:00 (08/05/2019)

``தாமதமாகும் தேர்தல் முடிவுகள்!" - விவிபேட் இயந்திரத்தில் என்ன பிரச்னை? #Loksabha

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தலைச் சந்திக்க இருக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் நாம் வாக்களித்த வேட்பாளர்களுக்குச் சரியான வாக்குகள் பதிவானதா என்பதைப் பார்க்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. விவிபேட் என்னும் அந்த இயந்திரத்தில் இதை வாக்காளர்கள் பார்க்கலாம்.

விவிபேட் 

ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுடன் விவிபேட்டில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் சரி பார்ப்பதன் மூலம் முறைகேடுகளைத் தவிர்க்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதாவது, மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் விவிபேட்டில் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரேண்டமாக 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் தகவல்களைச் சரி பார்க்க வேண்டும் என உத்தரவுவிடப்பட்டது. 

தேர்தல் ஆணையம்

இந்நிலையில், இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஒரு வெளிப்படத் தன்மை கிடைக்கும் என்று தெரிவித்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள் இந்த எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஏற்கெனவே நாங்கள் அறிவித்த உத்தரவில் மாற்றமில்லை. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளைச் சரிபார்த்தால் போதுமானது. இது தொடர்பாக நீங்கள் தேர்தல் ஆணையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்” என்று கூறி எதிர்க்கட்சிகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. 

சந்திரபாபு நாயுடு

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புதிய கோரிக்கையை முன்வைத்தனர். இது தொடர்பாக ட்விட்டரில் சந்திரபாபு நாயுடு, ``உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் எங்களின் கோரிக்கையை முன்வைத்தோம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் விவிபேட்டுடன் சரிபார்க்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் எண்ணிக்கையில் மாற்றம் இருந்தால்கூட மொத்த சட்டமன்றத் தொகுதியிலும் விவிபேட் இயந்திரத்துடன் சரிபார்க்க வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார். 
சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியிலிருந்து 5 வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திரம் மூலம் சரிபார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, இதன்மூலம் தேர்தல் முடிவுகள் கடந்த தேர்தலைவிட தாமதமாக வெளியாகும் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அதாவது, தேர்தல் முடிவுகள் 3 முதல் 5 மணி நேரம் வரை கூடுதல் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளனர்.