``தற்செயல்தான்; உள்நோக்கம் இல்லை!”- மூன்று பக்க அஃபிடவிட்டில் மன்னிப்பு கோரிய ராகுல் காந்தி | Rahul apologies for his statement regarding modi issues

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:13:36 (08/05/2019)

``தற்செயல்தான்; உள்நோக்கம் இல்லை!”- மூன்று பக்க அஃபிடவிட்டில் மன்னிப்பு கோரிய ராகுல் காந்தி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய ஆயுதமாக ரஃபேல் விவகாரம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் ரஃபேல் விவகாரம் தொடர்பாக பேசாத மேடையே இல்லை எனும் அளவுக்குத் தொடர்ச்சியாக தனது அனைத்துப் பிரசாரக் கூட்டத்தில் மோடியைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 

ரஃபேல் விவகார வழக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் சில முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாகவும், திருடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், `ஆவணங்கள் எங்கிருந்து வந்தவை என்பதைவிட, அவை சொல்லும் உண்மைகளே முக்கியமானவை. ஆகையால் அந்த ஆவணங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும்' என்று கூறினர். 

உச்ச நீதிமன்றம்

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் பேசிய ராகுல், `உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது, காவல்காரனே திருடன்' என்று தெரிவித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தப்படும் என்றுதான் சொன்னதே தவிர யாரையும் குற்றவாளி எனச் சொல்லவில்லை. 

மோடி

இந்த நிலையில், நீதிமன்றம் சொன்னதாக ராகுல் பொய் பரப்புரை செய்கிறார் என்று பா.ஜ.க எம்.பி மீனாட்சி லோகி, ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதற்குப் பதிலளித்த ராகுல், உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை முழுவதுமாகப் படிக்காமல், தான் தவறாக அப்படிப் பேசிவிட்டதாகவும், பிரசாரச் சூட்டில் தன்னை அறியாமல் அத்தகைய வார்த்தைகள் உபயோகப்படுத்தியதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எந்த எண்ணமும் தனக்கு இருக்கவில்லை என்றும் இதற்கு வருந்துவதாகவும் கூறினார். ஆனால் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த பா.ஜ.க தரப்பு அவர் வருத்தம்தான் தெரிவித்தார். மன்னிப்பு கேட்கவில்லை என வாதிட்டது. 

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று ராகுல் காந்தி 3 பக்க அபிடவிட் தாக்கல் செய்தார். அதில், `கவனமின்றியும் தற்செயலாகவும் சொன்ன கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்மீது தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய  வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

பாஜக எம்பி

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த பா.ஜ.க எம்.பி மீனாட்சி லோகி, ``நீங்கள் ஓடலாம். ஆனால் ஒளியமுடியாது. இறுதியாக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் அவரது பொறுப்பற்ற கருத்துக்கு மன்னிப்பு கோரினார்” என்றார். இந்த வழக்கின் விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.