''தனுஷ், சமந்தா பாடின பாட்டுதான் என் வெற்றிக்குக் காரணம்" - மிஸ் குளோப் இந்தியா அக்‌ஷரா ரெட்டி! | chennai girl won miss super globe india - 2019

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (08/05/2019)

''தனுஷ், சமந்தா பாடின பாட்டுதான் என் வெற்றிக்குக் காரணம்" - மிஸ் குளோப் இந்தியா அக்‌ஷரா ரெட்டி!

"மிஸ் சூப்பர் குளோப்" என்ற அழகிப் போட்டி உலகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. இதில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ள சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்வாகியுள்ளார். இது குறித்து அக்‌ஷரா ரெட்டியிடம் பேசினோம்.

மாடல்

 

"எனக்குச் சொந்த ஊர் சென்னை. படிச்சது அமெரிக்காவில். கடந்த ஏழு வருஷமாக மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். எங்க அம்மா சிங்கிள் மதராக இருந்துதான் என்னையும் என் அண்ணனையும் வளர்த்தாங்க. எங்களோட கரியரைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் எங்களுக்கு இருந்துச்சு. மாடலிங் பண்ணப் போறேன்னு சொன்னதும், எந்தத் தயக்கமும் இல்லாமல் என் கனவுகளுக்குத் துணையா நின்னாங்க என் அம்மா. 'மிஸ் குளோபல்' அறிவிப்பைப் பார்த்து ஆன்லைன் மூலம் அப்ளை பண்ணேன். இந்தியாவின் சார்பாக கலந்துக்க போறவங்களுக்கான போட்டிகள் கேரளாவில் நடந்துச்சு. இந்தியா முழுவதிலுமிருந்து 248 பேர் கலந்துக்கிட்டாங்க. பல சுற்றுகளுக்குப் பின் "மிஸ் குளோப் இந்தியா"வாக நான் வாகை சூடினேன். பொதுவாக டேலன்ட் சுற்றில் எல்லோரும் நடனம் ஆடுவதைத்தான் முயற்சி செய்வாங்க. ஆனால் நான் 'தங்க மகன்' படத்தில் இடம்பெற்ற என்ன சொல்ல, ஏது சொல்ல பாடலைப் பாடினேன். தனுஷ் சமந்தா பாடுற அந்தப் பாட்டை நான் பாடினதுதான் என் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம். அடுத்து உலக அளவில் துபாய் நாட்டில் நடக்க உள்ள இறுதிச்சுற்றுக்கு வீணை வாசிக்கப் பயிற்சி எடுத்து வருகிறேன்" என்றவரிடம், அழகிப் போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி விசாரித்தோம்.

அக்‌ஷரா

 

" மீ டூ பற்றியும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் பற்றியும் கருத்து கேட்டாங்க.  "மீ டூ என்பது பெண்களின் பாதுகாப்புக்கான ஆரம்பம்' எனப் பதிலளித்தேன். இது போன்று உலக அளவில் நடக்க உள்ள போட்டியில் கேள்வி பதில் சுற்றுக்குத் தனியாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்" என்கிறார் அழகுத் தமிழில்.

வாழ்த்துகள் தமிழச்சி.