`என்னை முட்டாள், பைத்தியம் என்கிறார்கள்!'- மின்சாரமின்றி 79 ஆண்டுகளாக வாழும் பேராசிரியை | ‘I can manage’ 79-yr-old Pune woman lived her whole life without electricity

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (08/05/2019)

கடைசி தொடர்பு:19:29 (08/05/2019)

`என்னை முட்டாள், பைத்தியம் என்கிறார்கள்!'- மின்சாரமின்றி 79 ஆண்டுகளாக வாழும் பேராசிரியை

மின்சாரம் இல்லாமல் 79 ஆண்டுகளை நகர்த்துவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. நவீன காலத்தில் அப்படியொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது. இப்படி நாம் யோசித்துக்கொண்டிருக்கும் சூழலில், ஹேமா நம்மையெல்லாம் ஆச்சர்யப்படுத்துகிறார். 

வீடு

புனேவில் உள்ள புத்வார் பெத் என்ற பகுதியில் வசிப்பவர் டாக்டர் ஹேமா சானி (79). இவர் புனேவில் உள்ள சாவித்ரி பாய் பூலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். அதேபோல கர்வாரே கல்லூரியில் சில ஆண்டுகளாக பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 79 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமலே தன் வாழ்க்கையைக் கழித்து நமக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். என்ன காரணம் என்பது குறித்தும் அவர் விளக்குகிறார். குறிப்பாக மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சிம்னி விளக்குகளைக் கொண்டு தமது வாழ்வை மிக ரம்மியமாக ஹேமா கட்டமைத்துள்ளார் ஹேமா. நாய்கள், பூனைகள், கீரிப்பிள்ளை, பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளையும் வீட்டில் வளர்த்து வருகிறார். அவற்றுக்கு உணவு பரிமாறுவது, பின்னர் உரையாடுவது எனப் பேரமைதியான சூழலில், இயற்கையான முறையில் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருகிறார். செல்லப் பிராணிகளுடன் இருக்கிற நேரம் போக, எஞ்சியுள்ள நேரத்தில் புத்தகங்கள் எழுதி வருகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைதான் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை.

மரங்கள்

ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாமல்தான் இருந்தது. தற்போதுதான் மின்சாரம் வந்துள்ளது. அதனால் எனக்கு இது ஒன்றும் பெரிதாக தேவைப்படவில்லை. எனக்கு இயற்கையும், அதைசார்ந்த சுற்றுச்சூழலும்தான் பிடித்திருக்கிறது. அதனால் மின்சாரம் இல்லாதது பெரும் குறையாக இல்லை. மக்கள் என்னை முட்டாள் என்கிறார்கள். நான் ஒரு பைத்தியம் என்கிறார்கள். எனக்கு அதெல்லாம் ஒருபிரச்னையில்லை. எனக்கு பிடித்ததுபோல் நான் வாழ்கிறேன்” என்கிறார். 

பேராசிரியை

அவர் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வருகிறார். சுற்றிலும் பல்வேறு மரங்கள் மற்றும் பறவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அவரது ஒவ்வொரு நாளும் காலை பறவைகளின் மெல்லிய சத்தங்களுடன் தொடங்குகிறது. இயற்கை ஒளியுடன் இரவு முடிகிறது. ஹேமா தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த 79 வயதிலும் கூட அவர் எப்போதெல்லாம் தனியாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் புதிய புத்தகங்களை எழுத உட்காருந்துவிடுவார். சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் அவருக்கு தெரியாத பறவைகள் மற்றும் மரங்களே இல்லை எனலாம். 

ஹேமா

மின்சாரம் தொடர்பாக பேசும் அவர், ``என் வாழ்நாள் முழுவதும் எனக்கு மின்சாரம் தேவையில்லை. மக்கள் அடிக்கடி என்னிடம் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்கிறாய் என்று கேட்கிறார்கள். நானும் அவர்களிடம் அதேதான் கேட்கிறேன். எப்படி மின்சாரத்துடன் வாழ்கிறீர்கள்’ என்று. `இந்தப் பறவைகள் என்னுடைய நண்பர்கள். நான் எப்பொழுதெல்லாம் வீட்டுவேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் அவை என்னுடன் வந்துவிடுவார்கள்.

`நீங்கள் இந்த வீட்டை விற்றால் அதிக பணம் தருகிறோம்’ என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. நான் சென்றுவிட்டால் யார் இந்தப் பறவைகளையும், மரங்களையும் பார்த்துக்கொள்வார்கள். எனக்கு இங்கிருந்து போக விருப்பமில்லை. இவர்களுடனே என் வாழ்க்கையைக் கழிக்க ஆசைப்படுகிறேன். புத்தர் கூறிய பொன்மொழியைப் பின்பற்றித்தான் வாழ்கிறேன். `உங்கள் பாதையை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்பதுதான் அது. எனக்கு பிறகு நான் வசித்த இடம் பறவைகளுக்கே சொந்தமாகும்’ என்று நெகிழ்கிறார் ஹேமா.

நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்!