அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை அதிகரித்தது ஏன்? | Akshaya Tritiya Gold sales increased over 25%

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (08/05/2019)

அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை அதிகரித்தது ஏன்?

இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை கடந்த ஆண்டைவிட 25% அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருப்பதும், திருமண சீசன் மற்றும் அட்சய திருதியை சென்டிமென்ட் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் சில்லறை விற்பனை விலை கடந்த ஆண்டைவிட 7% குறைவாக, கிராம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.3,200 என்ற விலையில் விற்பனையானது. 

அட்சய திருதியை

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்ட பின்பு ஏற்பட்ட பணப்புழக்க முடக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்க நகை விற்பனை பாதிப்படைந்திருந்தது. அதன்காரணமாக அட்சய திருதியை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடியிலிருந்து மக்கள் மீண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. 

சுவாமிநாதன்இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு தங்க நகை விற்பனை அதிகரித்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று சென்னை, ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, ``தமிழகத்தில் நேற்றைய விற்பனை குறித்த சரியான புள்ளிவிவரம் நாளைக்குத்தான் முழுமையாகத் தெரியவரும். பொதுவாக இந்த ஆண்டு விற்பனை நன்றாக நடந்திருப்பதாகத் தெரிகிறது. அட்சய திருதியை விற்பனைக்காகவே கூடுதலாக 40% தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் தேர்தல் அறிவிப்புக்குபின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்காரணமாக அதிக அளவில் பணமோ, தங்கமோ ஊர் விட்டு ஊர் எடுத்துச்செல்வது கடினமாக இருந்தது. அதன்காரணமாக பொதுமக்களால் அதிக அளவில் தங்கம் வாங்க முடியவில்லை. எனவே, கடந்த இரண்டு மாதமாக தங்க நகை விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே அட்சய திருதியை சிறப்பு விற்பனையை முன்னிட்டு அதிக அளவில் தங்க நகைகளை வாங்கியுள்ளார்கள் எனத் தெரிகிறது" என்றார்.