`அரசியலுக்காக எழுதவில்லை, மாேடிக்கு அறிவுறுத்துங்கள்!'- தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற ரத்தக் கடிதம் | Amethi Man's Letter In Blood To Poll Body Over PM's Rajiv Gandhi Remarks

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (08/05/2019)

கடைசி தொடர்பு:18:40 (08/05/2019)

`அரசியலுக்காக எழுதவில்லை, மாேடிக்கு அறிவுறுத்துங்கள்!'- தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற ரத்தக் கடிதம்

ராஜீவ்காந்தி குறித்து மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் தன் ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

கடிதம்


`ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தவர் ராஜீவ்காந்தி’ என பிரசாரத்தின்போது பேசிய மோடி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. `உங்கள் மனதில் உள்ள உங்களைப்பற்றிய எண்ணங்களை என் தந்தை மீது உருவகப்படுத்த வேண்டாம். உங்கள் கர்மா உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது” என ராகுல் விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்ப, ``துரியோதரனுக்கும் இதே அகங்காரம்தான் இருந்தது’ என பிரியங்கா காந்தி சாடினார். `மோடி பேசியதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இந்த நிலையில், இளைஞர் ஒருவர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

மோடி

அந்தக் கடிதத்தில், ``மோடியின் இந்தக் கருத்து எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ராஜீவ்காந்திதான் ஓட்டுரிமைக்கான வயதை 18 ஆக குறைத்தவர். கணினி புரட்சியைக் கொண்டுவந்தவர். பஞ்சாயத் ராஜைக் கொண்டுவந்தவர். பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட ராஜீவ்காந்தியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அமேதியைப் பொறுத்தவரை, ராஜீவ்காந்தியை அவமதித்தவர்கள் அவர்களைக் கொன்றவர்களுக்குச் சமமானவர்கள். அவர் எங்கள் மனதில் என்றும் நிலையாய் வாழ்பவர். மறைந்த தலைவர்கள் குறித்து இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என மோடிக்கு அறிவுறுத்த வேண்டும். இது அரசியலுக்காக எழுதவில்லை. மாறாக ராஜீவ்காந்தியின் உணர்வுகளில் ஏற்பட்ட நெருக்கத்தால் எழுதியிருக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சாஹக்ரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் காஷ்யப் என்ற இளைஞர்தான் இந்தக் கடிதத்தை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த தீபக் சிங் இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.