``தேர்தலுக்குப் பிறகு புதுத்திட்டம்!'' -மோடிக்கு எதிராக ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்! | Opposition parties are forming alliance against Modi?

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (08/05/2019)

கடைசி தொடர்பு:19:29 (08/05/2019)

``தேர்தலுக்குப் பிறகு புதுத்திட்டம்!'' -மோடிக்கு எதிராக ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், தனிப்பெரும்பான்மைக் கிடைக்காத கட்சியை ஆட்சியமைக்க அழைக்கக்கூடாது என குடியரசுத் தலைவரைச் சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவுள்ளன. மோடிக்கு எதிராக ஒன்றிணைய எதிர்க்கட்சிகள் யோசித்தும் வருகின்றன.

ந்த நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மைக் கிடைக்காது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் இதுபோன்ற முடிவுகள்தான் வருமென, இப்போதே அதற்குத் தகுந்தாற்போல் திட்டமிடத்துவங்கியுள்ளன. தற்போது பி.ஜே.பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இந்தத்தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும். அதனால் பி.ஜே.பி தலைமை இதற்கு சில மாற்று வழிகளைத் திட்டமிட்டுள்ளது.

மோடி

தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளன. அப்போது, `தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால்,  அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கூடாது' என ஜனாதிபதியிடம் கடிதம் கொடுக்கவுள்ளனர் எதிர்க்கட்சியினர். இந்தியா முழுதும் பி.ஜே.பி-யை எதிர்க்கும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் கையொப்பமிட்டு, கடிதம் ஒன்றையும் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளனர். எதிர்க்கட்சியினரின் இந்தத் திட்டத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பி.ஜே.பி திட்டமிட்டு வருகிறது.