`அன்று 300 கிலோ, இன்று 86 கிலோ!'- கின்னஸ் சாதனைக்குக் காத்திருக்கும் மும்பைப் பெண் | Mumbai woman lost 214kg with two surgeries in 4 years

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (09/05/2019)

`அன்று 300 கிலோ, இன்று 86 கிலோ!'- கின்னஸ் சாதனைக்குக் காத்திருக்கும் மும்பைப் பெண்

மும்பை பெண்

``8 ஆண்டுகளாக எனது பொழுதுகள் படுக்கையிலே கழிந்தன. இரவும் பகலும் கழிவது எல்லாமே அந்தப் படுக்கையில்தான். அந்தக் காலகட்டத்தில் நான் சூரியனைப் பார்த்ததில்லை. இனி நான் யாருடைய உதவியும் இல்லாமல் இந்தியாவைச் சுற்றிப்பார்க்கப்போகிறேன்'' என்கிறார் அமிதா ராஜனி ( Amita Rajani).

மும்பைவாசியான அமிதா ராஜனிக்கு 46 வயது. உடல் பருமன் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவரது எடை 300 கிலோவை எட்டியது. அதன்பின்னர் அவரது வாழ்க்கையே சிரமமாகிவிட்டது. தனது அன்றாட தேவைகளுக்குக்கூட மற்றவர்களின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டது. உணவு உண்பதற்கு, உடைகளை மாற்றுவதற்குக் கூட மற்றவர்களின் உதவி  தேவைப்பட்டது. இந்நிலையில்தான் பல்வேறு சிகிச்சைகள் மூலம் தனது உடல் எடையை 80 கிலோவாகக் குறைத்துள்ளார். எடை குறைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ள ஆசிய பெண் என்ற லிம்கா சாதனைக்காகக் காத்திருக்கிறார் அமிதா.

உடல் பருமன் பிரச்னை இவருக்குத் தனது 6 வது வயதிலிருந்தே ஆரம்பமாகியுள்ளது. 16 வயதில் இவரது எடை 126 கிலோவாக இருந்துள்ளது. இவருக்கு 28 வயதாகும் போது உடல் எடை மேலும் கூடத்தொடங்கியது. அப்போது இவரை பார்த்துக்கொள்வதற்காக இரண்டு பேரை நியமித்துள்ளனர் இவரது குடும்பத்தினர். இவர் எடை 300 கிலோவை எட்டியபோது தனது அன்றாடப் பணிகளை இயல்பாகச் செய்ய முடியவில்லை. மற்றவர்களின் உதவி தேவைப்பட்டுள்ளது. இவருக்கு 35 வயதானபோது படுத்த படுக்கையாகிவிட்டார். மருத்துவமனைக்கு முதன்முதலாகச் சென்றது குறித்துப் பேசியுள்ள அமிதா, `படுக்கையிலிருந்து என்னைத் தூக்குவதற்கு 6 பேர் வந்திருந்தனர். 3 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகே அவர்களால் என்னை வெளியே கொண்டு வர முடிந்தது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 6 அடி நீளமுள்ள சோபாவில் என்னை வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்’ என்றார்.

உடல்பருமன் பிரச்னைக்காகப் பல்வேறு மருத்துவமனையை அணுகியுள்ளார். இவரது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. பின்னர் புனேவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஷஷ்கான் ஷா என்பவரிடம் சிகிச்சைக்குச் சென்றார். ஷஷ்கான் இவரது உடல்நலம் குறித்து இரண்டு மாதங்களாக ஆய்வு செய்துள்ளார். அவருக்கு இருந்த உடல்நலப்பிரச்னைகள், சிறுநீரகச் செயலிழப்பு, நீரிழிவு மற்றும் சுவாச பிரச்னைகளைக் கண்டறிந்தார். 

இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர் ஷஷ்கான் ஷா, ``உடல் பருமன் அதிகரிப்புதான் மற்ற நோய்களுக்கு முக்கிய காரணம். ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இதுபிரச்னைகளை ஏற்படுத்தும். ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் காரணமாக அவரது உடல் எடையானது அதிகரித்துக்கொண்டே இருந்தது. உணவுப் பழக்கத்தின் காரணமாக ஒருவரின் உடல் எடை அதிகரிப்பது என்பது கடினமான ஒன்று. அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவெடுத்ததும் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தது கடும் சவாலாக இருந்தது. அவருக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சோபாவில் அழைத்து வரப்பட்டார்.  2015-ம் ஆண்டு நடந்த முதலாவது அறுவை சிகிச்சையின் போது அவரது வயிற்றில் இருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டோம். இரண்டு வருடத்திற்குப் பிறகு 130 கிலோவாக அவரது எடை குறைந்தது. இதன்பின்னர்தான் சிறுநீரகப் பிரச்னை, சுவாசப் பிரச்னைகள் சீரானது. இரண்டாவது அறுவை சிகிச்சை 2017-ல் செய்தோம். அதனால் அவருக்கு சில அலர்ஜிகள் ஏற்பட்டன. அதிலிருந்து அவர் மீண்டு வந்துவிட்டார். தற்போது அவரது உடல் எடை 86 கிலோவாக உள்ளது. இவரது உடல் எடையைக் குறைத்த விதத்தை லிம்கா கின்னஸ் சாதனைக்காக அனுப்பியுள்ளோம். அதற்கான அறிவிப்புக்குக் காத்திருக்கிறோம்”என்றார்.