ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி... நான்கே நாள்களில் ரூ.88,000 கோடி இழப்பு!  | Reliance Industries' market cap takes a hit of $10 bn in 4 days as shares fall

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:19:00 (09/05/2019)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி... நான்கே நாள்களில் ரூ.88,000 கோடி இழப்பு! 

கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் விலை, தொடர்ந்து நான்காவது நாளாகச் சரிவைச் சந்தித்ததால், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 88,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

டன் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் விலை, தொடர்ந்து நான்காவது நாளாகச் சரிவைச் சந்தித்ததால், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 88,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த 3-ம் தேதியிலிருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries - RIL) நிறுவனத்தின் பங்குகள் விலை சரிவடைந்து வருகிறது. தரகு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி, இந்த நிறுவனத்தின் தர மதிப்பீட்டைக் குறைத்துள்ளதோடு, இதன் பங்கு இலக்கு விலையை 1,349 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து  மும்பை பங்குச் சந்தையில் இன்றும், தொடர்ந்து நான்காவது நாளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை சரிவைச் சந்தித்தது. இன்றைய வர்த்தக நாளின் இடையே 3.32 சதவிகிதம் அளவுக்குச் சரிவைச் சந்தித்த அதன் பங்கு விலை, நேற்றைய (புதன்கிழமை) வர்த்தக நாளின் முடிவில் காணப்பட்ட விலையான 1,299.45 ரூபாயிலிருந்து சரிந்து1,256.30 ரூபாயாகக் காணப்பட்டது. 

இதேபோன்று தேசியப் பங்குச் சந்தையிலும் ஆர்.ஐ.எல் பங்கு விலை 2.80 சதவிகிதம் சரிவைச் சந்தித்து, 1,263.10 ரூபாயாக காணப்பட்டது. 

கடந்த 3-ம் தேதியிலிருந்து இதுவரை, அதாவது 4 வர்த்தக தினங்களில்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, 10 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பில், 88,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக (10 பில்லியன் டாலருக்கும் மேல்) சரிவு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமையன்று இதன் சந்தை மூலதனம் 8,77,844.24 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பங்குச் சந்தை

ஏற்கெனவே அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக மோதல் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து, இன்றுடன் ஏழாவது நாளாக சரிவைச் சந்தித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இதில் தப்பவில்லை.  

காரணம் என்ன? 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதன் எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவின் லாபம் குறைந்து வருவதும் அதன் பங்கு விலை சரிவுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு 2,87,505 கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவில் செய்த முதலீடு காரணமாக 2019-ம் நிதியாண்டில் கடன் தொகை மேலும் 69,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 

முகேஷ் அம்பானி

கடந்த 2017 மற்றும் 2019-ம் நிதியாண்டுகளுக்கு இடையே, இந்த நிறுவனத்தின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் (சி.ஏ.ஜி.ஆர்) 17 சதவிகிதமாக இருந்த நிலையில், 2020-ம் நிதியாண்டில் இதன் வருவாய் வளர்ச்சி விகிதம், பாதியாக குறைந்து விடும் எனச் சர்வதேச தரகு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி மதிப்பிட்டுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க