`வாபஸ் பெற நான் தயார்; தோப்புக்கரணம் போட நீங்கள் தயாரா?' - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி | Modi, hold your ears and do a hundred Utthak Baithak - Mamata

வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (09/05/2019)

கடைசி தொடர்பு:11:46 (10/05/2019)

`வாபஸ் பெற நான் தயார்; தோப்புக்கரணம் போட நீங்கள் தயாரா?' - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க-வுக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஸ்பீடு ப்ரேக்கரே மம்தா. அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என பிரசாரத்தில் மோடி பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய மம்தா, மோடியை நான் பிரதமராகக் கருதவில்லை. காலாவதியாகப்போகும் பிரதமருடன் பேச நான் விரும்பவில்லை என்றார்.

பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அமித் ஷா ‘மம்தா உங்களுக்கு அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும் அரசியலமைப்பின் சட்டப்படி பிரதமர். மோடி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பிரதமர் எனப் பேசினார்.

மேற்குவங்க பிரசாரத்தில் பேசிய மோடி, நிலக்கரி சுரங்கங்களில் திரிணாமுல் மாஃபியா ராஜ் தொடர்ந்து எப்படிச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். நிலக்கரி சுரங்கத்தில் உழைக்கும் உழைப்பாளர்களின் உழைப்பைச் சுரண்டி பிழைக்கிறார்கள் என்று கடுமையாகச் சாடினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய மம்தா, ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நிலக்கரி மாஃபியாவில் ஈடுபட்டுள்ளதாக மோடி குற்றஞ்சாட்டினார். நான் அவருக்குச் சவால் விடுக்கிறேன். இதை அவர் நிரூபித்துவிட்டால் 42 தொகுதியில் போட்டியிடும் எனது வேட்பாளர்களை வாபஸ் பெறச் சொல்கிறேன். மாறாக நீங்கள் பொய் கூறியிருந்தீர்கள் என்றால் உங்களது காதுகளை பிடித்துக்கொண்டு 100 முறை தோப்புக்கரணம் போடத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.