`நிரூபித்தால் போட்டியிலிருந்தே விலகிக் கொள்கிறேன்!' - ஆம் ஆத்மிக்கு எதிராகக் கொந்தளிக்கும் கம்பீர் | I feel ashamed to have a CM like Arvind Kejriwal says Gautam Gambhir

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (09/05/2019)

கடைசி தொடர்பு:19:38 (09/05/2019)

`நிரூபித்தால் போட்டியிலிருந்தே விலகிக் கொள்கிறேன்!' - ஆம் ஆத்மிக்கு எதிராகக் கொந்தளிக்கும் கம்பீர்

ஆம் ஆத்மி வேட்பாளர் குறித்த சர்ச்சைக்குக் கெளதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

கெளதம் கம்பீர்

டெல்லியில் மக்களவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க என முக்கோண நிலையில் டெல்லியில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. மூன்று கட்சிகளில் இருந்தும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கிழக்கு டெல்லி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் வலுவான போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சமீபத்தில் பா.ஜ.க சார்பில் நோட்டீஸ் ஒன்று விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியையும் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவையும் இணைத்து தவறான தகவல் அச்சிடப்பட்டிருந்தது. கூடவே அதிஷியை தவறாக சித்திரித்தும் கருத்துகள் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதிஷி

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிஷி, ``தன்னைப் பற்றி பாலியல் ரீதியாகத் தரக்குறைவான வகையில் கம்பீர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளார். கம்பீருக்கு ஒரேயொரு கேள்விதான். ஒரேயொரு பெண்ணுக்கு எதிராகக் கம்பீர் இப்படிச் செய்ய முடியும் என்றால், கிழக்கு டெல்லியில் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் நிலைமை என்னவாகும். இந்த நோட்டீஸைப் படித்துப் பார்த்தபோது இடிந்துபோய் விட்டேன். இத்தகைய எண்ணங்கள் கொண்ட கம்பீர் வெற்றிபெற்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும்" எனக் கூறிக்கொண்டே செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கதறி அழுதார்.

அதிஷி

மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இருந்தும் கம்பீருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க, `அந்த நோட்டீஸை நாங்கள் அச்சடிக்கவில்லை. அதை நாங்கள் விநியோகித்தது உண்மை என்றால், அதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்' எனக் கூறி வருகிறது. இதே கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கம்பீர், ஆம் ஆத்மி கட்சிக்கு சவால் ஒன்றையும் விடுத்துள்ளார். ``ஒரு பெண்ணின் அதுவும் உங்கள் சக பணியாளரின் தன்னடக்கத்தை மீறுகின்ற செயலை செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலை நான் வெறுக்கிறேன்.

கம்பீர்

இது அனைத்தும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக என்றால், நீங்கள் ஒரு இழிவானவர். உங்களின் அசுத்தமான மனதைச் சுத்தம் செய்ய ஒருவர் தேவைப்படுகிறார் என நினைக்கிறேன். கெஜ்ரிவால், அதிஷி உங்கள் இருவருக்கும் சவால் விடுக்கிறேன். நான் தான் இதைச் செய்தேன் என நீங்கள் நிரூபித்துவிட்டால் இப்போதே நான் தேர்தலில் இருந்து விலகிக்கொள்கிறேன். அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் அரசியலில் விலகிக்கொள்ளத் தயாரா?. கெஜ்ரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க