‘விராட் கப்பலில் பார்ட்டியா?’ - மோடியின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பதில் | Ex-Commander Of Navy Warship Denying modi statement on rajiv gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (10/05/2019)

கடைசி தொடர்பு:09:00 (10/05/2019)

‘விராட் கப்பலில் பார்ட்டியா?’ - மோடியின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பதில்

‘தன் சொந்த தேவைக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விராட்டை டாக்ஸி போலப் பயன்படுத்தியுள்ளார். அதில், அவரின் குடும்பம் மற்றும் சோனியா காந்தியின் பெற்றோர்கள் எனப் பலரும் சுற்றுலா சென்றனர். இதன் மூலம் ராஜீவ் காந்தி பெரும் ஊழல் செய்துள்ளார்’ இதுதான் பிரதமர் மோடி காங்கிரஸ் மீது சொன்ன குற்றச்சாட்டு. 1987-ம் ஆண்டு நடந்த இந்த விஷயத்தைவைத்து, பிரதமர் மோடி தற்போது பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி

உண்மையில் ராஜீவ் காந்தி, விராட் கப்பலில் சுற்றுலா சென்றாரா அல்லது அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தினாரா எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மற்றொரு புறம், அவர் கப்பலில் சென்றார் என்றும் அரசு வேலைக்காக மட்டுமே ராஜீவ் கப்பலைப் பயன்படுத்தினார் எனவும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன. 

ராஜிவ் காந்தி

இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாகப் பேசியுள்ள விராட் கப்பலின் முன்னாள் வைஸ் அட்மிரல் வினோத் பஸ்ரிசா, “ ராஜீவ் காந்தி, இந்தியப் போர்க் கப்பலை  குடும்ப சுற்றுலாவுக்காகப் பயன்படுத்தவில்லை. லட்சத்தீவில் உள்ள தீவு மேம்பாட்டு ஆணையர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவே அதைப் பயன்படுத்தினார். அப்போது, அவருடன் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் வந்திருந்தனர். பிரதமர் மோடி சொன்னதுபோல,  நடிகர் அமிதாப் பச்சனோ அல்லது சோனியாவின் குடும்பத்தினரோ அதில்  பயணிக்கவில்லை. மோடி, இந்திய பாதுகாப்பு படையை இப்படி அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஐ.என்.எஸ் விராட்

லட்சத்தீவு செல்வதற்கு முன் ராஜீவ் காந்தி திருவனந்தபுரத்தில் இருந்தார். நாங்கள் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்று, அவரை தீவுக்கு அழைத்துச்சென்றோம். திருவனந்தபுரத்தில் படகுத்துறை இல்லாததால், அவர் ஹெலிகாப்டரில் வந்தார். பிறகு, லட்சத்தீவில் உள்ள மூன்று தீவுகளில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் ராஜீவ் கலந்துகொண்டார். அனைத்து தீவுகளுக்கும் சிறிய ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்றார்.  நாங்கள் லட்சத்தீவுக்கு சென்ற இரண்டாம் நாள், ராஜீவ் காந்தி பங்கராம் தீவுக்குச் சென்றார். வெறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே அவர் அங்கு இருந்திருப்பார். அங்கே, தன் குடும்பத்தினருடன் உணவு உண்டு விட்டுத் திரும்பி வந்துவிட்டார்' எனத் தெரிவித்துள்ளார். இதே கருத்தைத்தான், விராட் கப்பலின் முன்னாள் சீஃப் கமாண்டராக இருந்த எல்.ராமதாஸும் தெரிவித்துள்ளார். 

எல்ராமஸ்

இதுபற்றி அட்மிரல் ராமதாஸ் பேசும்போது, “ ராஜீவ் காந்தி குடும்பத்துக்காக எந்த ஒரு தனி கப்பலும் பயன்படுத்தப்படவில்லை. எங்களுடன் ஒரு சிறிய ஹெலிகாப்டர் மட்டுமே இருந்தது. அதுவும் அப்போதைய பிரதமருக்கோ அல்லது அவரின் மனைவிக்கோ உடல் நிலை சரியில்லாமல் போனால், அந்த அவசர உதவிக்குப் பயன்படுத்தவே உடன் இருந்தது. ராஜீவ் காந்தி, அரசு வேலைக்காகத் தன் மனைவியுடன் சில இடங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்றார். விராட் கப்பலிலோ அல்லது லட்சத்தீவுகளிலோ எந்த பார்ட்டியும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.