15,000 லைக்ஸ்; 7,500 ஷேரிங்ஸ்! - வைரலான அம்மாவின் ஃபேஸ்புக் பதிவு | Mother's FB post gets viral

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (10/05/2019)

கடைசி தொடர்பு:14:41 (10/05/2019)

15,000 லைக்ஸ்; 7,500 ஷேரிங்ஸ்! - வைரலான அம்மாவின் ஃபேஸ்புக் பதிவு

இந்தியா முழுவதும் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற்றதை ஃபேஸ்புக்கில் மகிழ்ச்சியோடு பகிர்த்துகொள்ளும் பெற்றோர்களைக் காணமுடிகிறது. பிள்ளைகள் மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தால் அதைத் தர்மசங்கடத்துடன் வெளிப்படுத்தும் பெற்றோர்களையும் ஆங்காங்கே காணமுடிகிறது. தலைநகர் டெல்லியைச் சேர்ந்த பெண்மணி, பத்தாம் வகுப்புத் தேர்வில் தன் மகன் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றதைப் பெருமையுடன் ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். உடனே அந்தப் பதிவுக்கு இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பாராட்டுகள் குவிந்துவிட்டன.

வந்தனா

டெல்லியைச் சேர்ந்த வந்தனா சுஃபியா கடோச் என்ற பெண்மணி தனது ஃபேஸ்புக் பதிவில், ``என் மகன் 90% மதிப்பெண்ணைப் பெறவில்லை என்றாலும் இந்த 60% மதிப்பெண் எனது மகிழ்ச்சியை மாற்றிவிடவில்லை. சில பாடப்பிரிவுகளைப் படிக்க அவன் எவ்வளவு சிரமப்பட்டான் என்று எனக்குத் தெரியும். இருந்தும் மனம்தளராமல் தேர்வுக்கு முன்னர், ஒன்றரை மாதங்கள் மட்டும் தீவிர கவனத்தோடு படித்து இந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளான்" எனப் பெருமையோடு பதிவிட்டுள்ளார். மேலும் அவரது மகன் ஆமீருக்கும், ``உனக்கான வழியை நீயே தீர்மானித்துக்கொள், உனது நற்குணம், ஆர்வம் மற்றும் அறிவாற்றலை அப்படியே உயிர்ப்புடன் வைத்திரு" என்றெல்லாம் நல்ல அறிவுரைகளைக் கூறியிருந்தார்.

முகநூல்

இந்தப் பதிவைப் படித்த பலரும் அந்தப் பெண்மணிக்கு பாராட்டுகளைக் குவித்துவிட்டார்கள். அந்த பதிவுக்கு 15,000+ லைக்குகளும், 2,100 கமென்டுகளும், 7,500 ஷேரிங்குகளும் கிடைத்துள்ளன. பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும், இந்தப் பதிவைப் பார்த்து பெற்றோர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் பலர் கூறியிருந்தார்கள். இப்படியோர் அன்னையைப் பெற்றுள்ள மகன் ஓர் அதிர்ஷ்டசாலியென்றும் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். நீங்கள் ஒரு பிரபலமாகிவிட்டீர்கள். உங்களைத் தெரியாத மக்கள்கூட உங்களுடைய பதிவைப் பாராட்டி, பகிர்ந்து வருகிறார்கள். இந்தியக் கல்வித்துறை, மதிப்பெண்ணைப் பெரிதாகக் கருதாமல், புதிய சிந்தனையையும், அறிவாற்றலையும் மதிப்பதாக இருக்க வேண்டும் என்றும் ஒருவர் பாராட்டியிருந்தார். 

பதிவை எழுதிய வந்தனா, எனது ஃபேஸ்புக் பதிவுக்கு எப்படி இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததெனத் தெரியவில்லை. எனினும் இது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். இதுகுறித்த உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று மாற்றம் நிகழவேண்டும் என்று கூறியுள்ளார்.