`அயோத்தி பிரச்னைக்கு இதுதான் சிறந்த தீர்வு!' - யோசனை சொல்லும் உ.பி கல்லூரி மாணவி | A College Student give Solution For Ayodhya Dispute

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:16:30 (10/05/2019)

`அயோத்தி பிரச்னைக்கு இதுதான் சிறந்த தீர்வு!' - யோசனை சொல்லும் உ.பி கல்லூரி மாணவி

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நாளை மறுநாள் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

அயோத்தி

இதற்கிடையில் ஆங்கில ஊடகமான என்.டி.டி-விக்கு பேட்டியளித்துள்ள உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி அயோத்தி பிரச்னைக்குத் தீர்வுகான ஒரு யோசனை கூறியுள்ளார். ``என் மொத்த கிராமத்திலும் செல்லும் ஒரே பெண் நான்தான். வருங்காலத்தில் டிப்ளமோ நர்ஸிங் படிக்கப்போகிறேன். அதன் பிறகு எம்.எஸ்.சி படிக்கவும் ஆசைப்படுகிறேன். எங்கள் கிராமத்தில் நிறைய பிரச்னை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை நிலையில்தான் வாழ்கின்றனர். நிச்சயமாக இது சரிசெய்யப்பட வேண்டும்.

கல்லூரி மாணவி

அரசும், அவர்களின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் ஓட்டுக் கேட்க மட்டுமே எங்கள் கிராமத்துக்கு வருகின்றனர். தேர்தலில் வெற்றிபெற்றால் யாரும் எங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒரு வேளை அவர்கள் எங்கள் மக்களின் வறுமை நிலையைப் புரிந்துகொண்டால் இங்கு சில மாற்றங்கள் ஏற்படும். இந்தக் கிராமத்தில் ஒருவருக்குக் கழிவறை கிடைத்தால் அவரைத் தொடர்ந்து அனைவருக்கும் கழிவரை கிடைத்துவிடும். எங்கள் கிராமத்தில் நிறைய கால்நடை, விலங்குகள் உள்ளன. அதனால் விளைநிலங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டு எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. நாங்கள் எது விளைவித்தால் அதை அழித்து நாசமாக்கிவிடுகிறது. 

அயோத்தி

அயோத்தி விவகாரம் இங்கு பிரச்னையாக உள்ளது. அதற்காக நிறைய போராட்டங்கள் கலவரங்கள் நடக்கின்றன. இந்து, முஸ்லிம் போன்ற பிரச்னைகள் எதுவும் வேண்டாம். கோயிலுக்குப் பதிலாக அந்த இடத்தில் கல்லூரி அல்லது ஏதேனும் கல்வி நிலையங்கள் கட்டினால் அனைத்து குழந்தைகளும் அங்குப் படிக்க வருவார்கள். அதனால் சமூகத்துக்கு நன்மையும் கிடைக்கும். இங்கு இந்து, இஸ்லாமியர்கள் அனைவரும் சகோதரர்களைப் போலத்தான் பழகி வருகிறோம். கோயில் அல்லது மசூதியைவிட அந்த இடத்தில் கல்லூரி கட்டினாலே சிறந்தது’' எனத் தெரிவித்துள்ளார். 

News & Photo Credits : NDTV