`2002-ல் மோடியை பதவிநீக்கம் செய்ய வாஜ்பாய் விரும்பினார்; அத்வானி தடுத்தார்!' - யஷ்வந்த் சின்ஹா | In 2002 Vajpayee wanted to sack Modi, says Yashwant Sinha

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (10/05/2019)

கடைசி தொடர்பு:21:20 (10/05/2019)

`2002-ல் மோடியை பதவிநீக்கம் செய்ய வாஜ்பாய் விரும்பினார்; அத்வானி தடுத்தார்!' - யஷ்வந்த் சின்ஹா

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடியைப் பதவிநீக்கம் செய்ய வாஜ்பாய் முடிவெடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார். 

வாஜ்பாய் - மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து கரசேவகர்கள் சபர்மதி ரயிலில் வந்துகொண்டிருந்தபோது குஜராத் மாநிலம் கோத்ரா அருகே அந்த ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 59 பேர் பலியாயினர். இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் வெடித்த வன்முறையில் 1200 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு மற்றும்  கலவரங்களைத் தொடர்ந்து மோடியை குஜராத் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

யஷ்வந்த் சின்ஹா

கோவாவில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்தலாம் என்றும் அவர் மறுக்கும்பட்சத்தில் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்யவும் வாஜ்பாய் முடிவு செய்திருந்தார். ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி தடுத்ததால், அந்த முடிவை வாஜ்பாய் கைவிட்டார். மோடியைப் பதவிநீக்கம் செய்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என அத்வானி வாஜ்பாயிடம் கூறினார்'' என்று பேசினார். 
அதேபோல், ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறிய விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே முன்னாள் கடற்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துவிட்டதாக முடித்துக்கொண்டார்.