சிறந்த டீம்வொர்க்குக்கு உதாரணம்..! - வைரலாகும் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு | Good teamwork means all hands to the deck says rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (11/05/2019)

கடைசி தொடர்பு:07:47 (11/05/2019)

சிறந்த டீம்வொர்க்குக்கு உதாரணம்..! - வைரலாகும் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்தப் பிரசாரங்களின்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. கேரளா சென்றபோது அவரை நெகிழவைக்கும் நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன. 7 வயது சிறுவன் முதல் பாட்டி வரை அவரை நெகிழவைத்தனர். பதிலுக்கு அவரும் நெகிழவைத்தார். 

ராகுல் காந்தி

இதேபோல் கான்பூர் ஏர்போட்டில் தன் சகோதரி பிரியங்காவை யதேச்சையாகச் சந்தித்தபோதும் அவரை ராகுல் கலாய்த்த சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த நிலையில், இதேபோன்று மற்றுமொரு சுவாரஸ்ய சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. இன்று இமாசல பிரதேசத்தில் பிரசாரம் செய்வதற்காக தனது ஹெலிகாப்டரில் உனா பகுதிக்குச் சென்றிருந்தார். பிரசாரம் முடித்துக் கிளம்பும்போது அவரது ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து ராகுலும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட ரிப்பேரை சரி செய்ய முயன்றார். 

ராகுல்

இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ``சிறந்த டீம்வொர்க் என்பது அனைத்து கைகளும் கோப்பது தான். உனாவுக்குச் சென்றிருந்தபோது எங்கள் ஹெலிகாப்டரில் ஒரு சிக்கல் இருந்தது. சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயன்றதால் விரைவாகப் பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை" எனப் பதிவிட்டிருந்தார். ஊழியர்களுடன் சேர்ந்துகொண்டு கீழே படுத்துக்கொண்டு பழுதைச் சரி செய்யும் ராகுலின் அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க